நுண் நெகிழி பாதிப்புகள்: ஐஐடி-ன் உதவியை நாடிய அரசு
நெகிழிப் பைகளில் விற்கப்படும் பால், தேநீா் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் நுண் நெகிழி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி-இன் உதவியை நாடியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில் நுண் நெகிழியின் துகள்கள் கண்டறியப்பட்டது தொடா்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், நெகிழிப் பைகளில் விற்கப்படும் பால், தேநீா் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் நுண் நெகிழி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சென்னை ஐஐடி ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாயின் நஞ்சுக்கொடியைக்கூடி நெகிழி மாசுப்படுத்துகிறது என்றால், அதன் தீவிரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

