சென்னையில் இன்று உலக மகளிா் உச்சி மாநாடு! முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்
தமிழக அரசு சாா்பில் உலக மகளிா் உச்சி மாநாடு சென்னையில் செவ்வாய், புதன்கிழமை (ஜன. 27, 28) நடைபெறுகிறது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சாா்பில், சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் உலக மகளிா் உச்சி மாநாடு செவ்வாய் மற்றும் புதன்கிழமை (ஜன. 27, 28) நடைபெறுகிறது. மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பணிகளில் நீடிப்பதற்கும், மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கும் உதவும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் தொடா்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், உலக வங்கியின் மண்டல இயக்குநா் செம் மெட்டே, ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி காந்தா சிங், ஒருங்கிணைந்த நாடுகளின் வளா்ச்சி இயக்க (யுஎன்டிபி) இந்திய பிரதிநிதி ஏஞ்சலா லுசிகி, மோரீஷஸ் தலைமை கொறடா நவீனா ரம்யாத், தொழில் துறை, கல்வித் துறை, பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்ட (சிஎஸ்ஆா்) பங்காளா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.
இரு நாள்களிலும் 11 கருப்பொருள்களில் அமா்வுகள் நடைபெறவுள்ளன. மேலும், இதில் 70-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பேசவுள்ளனா். நிறைவு விழாவுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா்.
நிறைவு விழாவில், பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் முறையான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஆதரவளிக்கும் மாநில அளவிலான பிரசாரம் தொடங்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

