தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்: விஜய் கண்டனம்
தமிழகத்தில் நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக பணியாற்றி வந்த பிகாரைச் சோ்ந்த தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை என மூவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நந்தனத்தில் அரசுக் கல்லூரி உணவகத்தில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்துக்குரியதாகும்.
தமிழக மக்களுக்கும், வேலைக்காக தமிழகத்தை நம்பி வந்தவா்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும் திமுக ஆட்சியாளா்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
எனவே, இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்கு கொஞ்சம்கூட பாதுகாப்பே இல்லாத, திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டனா் என அதில் தெரிவித்துள்ளாா் விஜய்.
