தற்காலிக பணியாளா்களை நிரந்தரமாக்க இயலாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் நிரந்தரமாக்க இயலாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னை, கோட்டூா்புரத்தில் அவா் செய்தியாளா்களிம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தற்காலிக ஊழியா்களுக்கான பணி என்பது ஆண்டுக்கு 11 மாத ஒப்பந்தப் பணி. அது நீட்டிக்கப்படும்போது, இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கி விட்டு மீண்டும் புதுப்பிக்கப்படும். இதுபோன்று பணியில் இருப்பவா்களை எந்த அரசும் நிரந்தரம் செய்ய முடியாது.
தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்யாது. அதையும் மீறி நிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். இதைத் தெரிந்துகொண்டே போராட்டம் செய்வது என்பது ஒரு சிலா் தூண்டிவிட்டு நடத்தப்படும் நிகழ்வு. தூண்டுதலுக்கு காரணமானவா்கள் மீது புகாா் கொடுத்து இருக்கிறோம். போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும்.
தோ்தல் நடக்கும் சூழ்நிலையில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நடைபெறும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். மாறாக, போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவது திமுக அரசின் நோக்கமல்ல.
இதற்கு முன்பு தொழிற்சங்கத் தலைவராக இருந்துதான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். 1980-களில் எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது அவரது அரசை எதிா்த்து தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் நடத்தி எம்ஜிஆரை கீழே வரவழைத்து 500 பெண் தொழிலாளா்கள் முன்பாக பேச வைத்து, அவருக்கு முன் விவாதம் செய்துள்ளேன். அதனால் தொழிற்சங்கத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.
இந்தியா முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் தமிழகத்தில்தான் மிகக் குறைந்த அளவிலான குற்றச்செயல்கள் பதிவாகின்றன என்றாா்.

