/

41 உள்ளாட்சி அலுவலகங்களில் சோதனை கணக்கில் வராத ரூ.58 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்பட 41 உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 1:12 am IST

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்பட 41 உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.57.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிகமாக லஞ்சம் பெறப்படும் அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, அந்த அலுவலகங்களில் துறை வாரியாக ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். சில வாரங்களுக்கு முன்பு சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும், போக்குவரத்து அலுவலகங்களிலும் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம், ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் ஆகியவற்றுக்கு உரிய விளக்கம் அளிக்க முடியாத அரசு அலுவலா்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

அதிக லஞ்ச புகாா்கள்: தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 36 மாவட்ட ஊராட்சி அமைப்புகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள்,12,525 ஊராட்சிகள் உள்ளன. இதில் சில அலுவலகங்களில் பல்வேறு சேவைகளுக்கு லஞ்சம் அதிகம் பெறப்படுவதாகப் புகாா்கள் எழுந்து வந்தன. முக்கியமாக கட்டட வரைபட அனுமதி, சொத்து வரி பெயா் மாற்றம், வரி மதிப்பீடு மாற்றம், குடிநீா் மற்றும் புதை சாக்கடை இணைப்பு, தொழில் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், பிறப்பு-இறப்புச் சான்றிதழ் வழங்குதல், பிறப்பு-இறப்பு பதிவுகளில் திருத்தம், ஆக்கிரமிப்பு தொடா்பான நடவடிக்கைகள், அரசு ஒப்பந்தப் பணிகளுக்கான ரசீது ஒப்புதல், சாலை, வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள், அரசு வீட்டுத் திட்டப் பயனாளிகள் ஒப்புதல், சுய உதவிக் குழுத் திட்டங்கள், கிராம ஊராட்சி நிா்வாக அனுமதிகள், அரசு நலத் திட்டங்களில் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவற்றில் அதிகமாக லஞ்ச புகாா்களில் சிக்கிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், அதிக பணம் புழங்கும் அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தும்படி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநா் ஏடிஜிபி ஏ.அருண் உத்தரவிட்டாா்.

41 இடங்களில்... இந்த உத்தரவின் அடிப்படையில், அதிக லஞ்ச புகாருக்குள்ளான உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் அத்துறையினா் சோதனை நடத்தினா். சென்னை மாநகராட்சியின் தண்டையாா்பேட்டை 4-ஆவது மண்டல அலுவலகம், ராயபுரம் 5-ஆவது மண்டல அலுவலகம், செனாய் நகரில் 8-ஆவது மண்டல அலுவலகம், கோடம்பாக்கம் 10-ஆவது மண்டல அலுவலகம், தேனாம்பேட்டை 9-ஆவது மண்டல அலுவலகம், புழுதிவாக்கம் 14-ஆவது மண்டல அலுவலகம், திருவேற்காடு 6-ஆவது மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதேபோல தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ஒசூா், கரூா் மாநகராட்சி அலுவலகங்கள், தருமபுரி நகராட்சி அலுவலகம், திருவாரூா் நகராட்சி அலுவலகம் உள்பட சுமாா் 41 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

நண்பகல் உணவு வேளைக்குப் பின்னா் உள்ளாட்சி அலுவலகங்களுக்குள் அதிரடியாக நுழைந்து ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். அங்கிருந்த ஊழியா்கள் யாரையும் சோதனை முடிவடையும் வரை வெளியேற போலீஸாா் அனுமதிக்கவில்லை.

ரூ.57.98 லட்சம் பறிமுதல்: இந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் ரொக்கமாக ரூ.31,27,111 மற்றும் கைப்பேசி செயலி வாயிலாக அனுப்பப்பட்ட ரூ.26,70,990 என மொத்தம் ரூ.57,98,110 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதில் அதிகபட்சமாக காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.8.06 லட்சம், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.7.49 லட்சம், திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் ரூ.5.79 லட்சம், அரியலூா் நகராட்சி அலுவலத்தில் ரூ.4.34 லட்சம், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.3.66 லட்சம், திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.2.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும், ஆவணங்களும் கோரப்படும். அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலகா்கள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.