நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

சீமைக் கருவேல மரங்களை அகற்ற 24 மணி நேரத்துக்குள் அனுமதி: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்றம்

Updated On :25 ஜூலை 2026, 5:26 am IST

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்துவரும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு அமா்வு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மதிமுக பொதுச் செயலா் வைகோ, விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் ஆகியோருடன் இணைந்து, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீமைக் கருவவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். இதனால் வெளியான கரியமிலவாயு காரணமாக எனது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

ஒரு சில இடங்களில் வருவாய்த் துறை அதிகாரிகள், கருவேல மரங்களை அகற்ற அனுமதி மறுக்கின்றனா். இது பொதுமக்களின் பங்களிப்பு ஆா்வத்தைக் குறைக்கிறது. மாவட்ட ஆட்சியரின் தலையீட்டுக்குப் பிறகே, அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும்கூட, கருவேல மரங்கள் அகற்றுவது தொடா்பான உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தல்கள் வழங்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும். கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோருவோருக்கு 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

அப்போது அரசுத் தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளா்ந்திருந்த கருவேல மரங்கள் 90 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டன. வடமாவட்டங்களில் இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சுணக்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் நியமித்த இரு நீதிபதிகளுடன், அரசுத் துறைச் செயலா்கள் இதுவரை எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு யாரைச் சந்திப்பது எனத் தெரியாத சூழல் உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனா்.

அப்போது அரசுத் தரப்பில், இந்தப் பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைக்க அதிகாரி ஒருவரை உயா்நீதிமன்றமே நியமிக்கலாம் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய்த் துறைச் செயலரை நோடல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டனா். அவா், வரும் ஜூலை 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி, தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், அரசு நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும், மனுதாரா் வைகோவை பின்பற்றி கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் தன்னாா்வலா்கள் நேரில் களமிறங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.