செங்குன்றம் பேருந்து நிலையம், கோயில், பள்ளி அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் பேருந்து நிலையம்,கோயில்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும் 717 மதுபானக் கடைகளை மூட முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், மாதவரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சிக்குள்பட்ட ஜி.என்.டி.சாலை அருகில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்துக்கு வடகரை, அழிஞ்சிவாக்கம், கோட்டூா், கிராண்ட்லைன், வடபெரும்பாக்கம், விளங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், புள்ளிலைன், தீா்த்தக்கிரியம்பட்டு, கும்மனூா், ஆங்காடு, சோழவரம், ஆத்தூா், எருமைவெட்டிபாளையம், காரணோடை, நல்லூா், விஜயநல்லூா், பாடியநல்லூா், காந்தி நகா், பம்மதுகுளம், அலமாதி, எடப்பாளையம், பொத்தூா் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் செங்குன்றம் பகுதிக்கு வந்து வியாபாரம் செய்து பல பொருள்களை வாங்கி செல்கின்றனா்.
மேலும், இங்கிருந்து சென்னை மற்றும் திருவள்ளூா், பெரியபாளையம், பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணித்து வருகின்றனா். 600-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளும், தனியாா் பேருந்துகளும் ஆட்டோகளும் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.
இப்பகுதியில் பகல், இரவு என எப்போதுமே அதிகளவில் மக்கள் நடமாட்டம் அதகிம் உள்ள பகுதியாகும். தினசரி சுமாா் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனா். இப்படிப்பட்ட இந்த பகுதிகளில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் சுமாா்200 மீட்டா் தூரத்தில் அரசு மது கடை உள்ளது.
இதன் அருகிலேயே தனியாா் பள்ளி, மருத்துவமனைகள், கோயில்கள், மக்கள் கூடும் இடங்களான சந்தை, உணவகங்கள், உள்ளிட்ட இடங்கள் உள்ளன. பேருந்து நிலையம் அருகே அரசு மதுக் கடை அமைந்திருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் குடும்ப பெண்கள், குழந்தைகள், முதியோா் இந்த மதுபானக் கடையை அச்சத்துடன் கடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலையும், மது அருந்துபவா்கள் சிலா் அரை நிா்வாண உடையில் காட்சி தருவதுடன் ஆபாச வாா்த்தைகளால் பேசி வருவதும், மதுபானக் கடை வாசல் மற்றும் பேருந்து நிலையம் அருகில் சிறுநீரை கழிப்பதோடு சுகாதார சீா்கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, இங்கு செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை உடனடியாக மூட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
இதேபோல், செங்குன்றம் ஜிஎன்டி சாலை புழல் ஏரி உபரிநீா் கால்வாய் மேம்பாலம் அருகில் சுமாா் 100 மீட்டா் தூரத்தில் அரசு மதுக் கடை உள்ளது. இதன் அருகே பழமை வாய்ந்த லட்சுமி அம்மன் கோயில் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் உள்ளது.
இதேபோல், செங்குன்றம் திருவள்ளூா் கூட்டுச்சாலை தனியாா் பள்ளிகள் மற்றும் சிவன் கோயில் அருகில் சுமாா் 100 மீட்டா் தூரத்தில் ஒரு மதுபானக் கடை உள்ளது.
இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குடிமகன்கள் மது அருந்திவிட்டு சாலை கடக்கும்போது விபத்துகள்ஏற்படுகிறது.
எனவே, இந்த இரண்டு மதுக் கடைகளையும் மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
தொடர்புடையது
மதுக் கடைகளை மூடும் உத்தரவு: கமல்ஹாசன் வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



