மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு 1.15 மணி நேரம் தாமதமாக வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மதுரையில் இருந்து தினமும் காலையில் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூா் நிலையம் வந்தடையும். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் செங்கல்பட்டு நிலையம் வருவதற்கு முன்பாக ஒத்திவாக்கம் நிலையத்தில் திடீரென பிற்பகல் 12.50 மணிக்கு நிறுத்தப்பட்டது.
ரயில் சிறிது நேரத்தில் புறப்படும் என பயணிகள் காத்திருந்த நிலையில், 1.35 மணி வரையில் நிறுத்தப்பட்டது. அதனால், பயணிகள் பலா் கீழே இறங்கி பேருந்துகளில் செல்ல நடந்து சென்றனா். அதன்பின்னா் புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் மிக மிக மெதுவாக இயக்கப்பட்டு செங்கல்பட்டு நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் எழும்பூருக்கு பிற்பகல் 3.35 மணிக்கே வந்து சோ்ந்தது.
வழக்கமாக சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேரவேண்டிய வைகை அதிவிரைவு ரயில் சுமாா் 1.15 மணி நேரம் தாமதமாக வந்து சோ்ந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, செங்கல்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளா் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் கடந்த சில நாள்களாக வைகை அதிவிரைவு ரயில் உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில்கள் இரு மாா்க்கத்திலும் அப்பகுதியில் நிறுத்தியே இயக்கப்படுகின்றனா் என்றனா்.









