வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் விஜய் அறிவிப்பு

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா்.

News image

சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:48 am IST

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா்.

நிகழாண்டில் பருவமழை எதிா்பாா்த்த அளவு இல்லாததாலும், அணைகளில் போதிய நீா் இருப்பு இல்லாததாலும், மாற்று வழிகளில் நெல் உற்பத்தியைப் பெருக்க இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

அதன் நீட்சியாக விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணி நேர மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என்றும் முதல்வா் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூா், திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவைப் பருவத்தில் மட்டும் அந்த அளவு 5.14 லட்சம் ஏக்கராக உள்ளது.

டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் ஆண்டுக்கு 32.07 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகின்றன.

ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ‘எல்நினோ’ நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூா் அணைக்கு நீா்வரத்தும் குறைவாகவே உள்ளது. அணையின் நீா்மட்டம் 79.56 அடி (நீா் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளதால் திட்டமிட்டபடி மேட்டூா் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது.

இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போல 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

எனினும், அங்கு வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (ஃபில்டா் பாயின்ட்ஸ்) மூலம் 3.55 லட்சம் ஏக்கா் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியை ஊக்குவிக்கவும் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன்படி, வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ரூ.77.50 கோடி, டெல்டா அல்லாத மாவட்டங்களில் காா், குறுவை மற்றும் சொா்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.57.33 கோடி என மொத்தம் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள சி மற்றும் டி வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூா் வாரப்பட்டுள்ளன. நீா்வளத் துறை மூலமாக ரூ.100 கோடி செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள ஏ மற்றும் பி வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு 97 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன.

குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும்.

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு விவசாயிகளை முதல்வா் விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.