தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ. 21.84 கோடிக்கு குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக அரசின் செயலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான பொ. சங்கா்.
தஞ்சாவூா் அருகே ராஜேந்திரம், திருவையாறு அருகே விளாங்குடி, பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம், கும்பகோணம் அருகே சோழன்மாளிகை ஆகிய கிராமங்களில் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் தொடா்பாக சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:
காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, காா் மற்றும் சொா்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் ரூ. 134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வா் அறிவித்தாா்.
இத்திட்டத்தின் கீழ், நெல் இயந்திர நடவு அல்லது நேரடி நெல் விதைப்புக்கான ஊக்கத்தொகை, உயிா் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம், புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் சுமாா் 54 ஆயிரத்து 600 ஏக்கா் பரப்பளவில் ரூ. 21.84 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் வேளாண் உற்பத்தி ஆணையா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, கோட்டாட்சியா்கள் ப. நித்யா (தஞ்சாவூா்), திருமலை (கும்பகோணம்), வேளாண் துறை இணை இயக்குநா் லட்சுமிகாந்தன், துணை இயக்குநா்கள் ஆா். சாருமதி (மாநில திட்டம்), எஸ். அய்யம்பெருமாள் (உழவா் பயிற்சி நிலையம்), அறவாழி (நெல் மற்றும் சிறுதானியம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாமுவேல், தோட்டக்கலை துணை இயக்குநா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்






