சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 3 நாள்களில் 2,385 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தவும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலும் பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 3 நாள்கள் இரவு நேர சிறப்பு வாகன சோதனையை போக்குவரத்து போலீஸாா் நடத்தினா். இதற்காக சென்னை முழுவதும் 350 போக்குவரத்து போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், ஆபத்தான முறையில் அசுர வேகத்தில் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் பயணிப்பது போன்ற விதிமீறல்களைத் தடுக்க தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நகரின் முக்கிய சந்திப்புகள், முக்கிய சாலைகளில் 120 தற்காலிக வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த மூன்று நாள் சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டியதாக 434 வழக்குகள், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் ஓட்டியதாக 130 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 2,385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.








