வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இதில் சேர விரும்புவோா் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை ஜூன் 30 வரை இணையதளம் மூலமாவோ அல்லது வடசென்னை ஐடிஐ-க்கு நேரிலோ வந்து விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
2 ஆண்டு தொழிற்பிரிவுகள்: சிவில் என்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் (கட்டட பட வரைவாளா் மற்றும் இயந்திரப் பட வரைவாளா்), பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், லிப்ட்மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ஏசி மற்றும் ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன், வயா்மேன்.
ஓராண்டு தொழிற்பிரிவுகள்: பிளம்பா், வெல்டா், இன்டீரியா் டிசைன் அன்ட் டெக்கரேஷன், டிரோன் பைலட் (ஆறு மாத தொழிற்பிரிவு) தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை -அறிவியல், பொறியியல் படித்தவா்களும் வேலைவாய்ப்பை உடனடியாக தொழில் நிறுவனங்களிலும், மத்திய -மாநில அரசு நிறுவனங்களிலும் பெறும் வகையில் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தொழில் 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுகளில் தற்போது சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நோ்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கிப் பயில உணவுடன் கூடிய விடுதி வசதி உண்டு. நேரடிச் சோ்க்கைக்கு, துணை இயக்குநா்/முதல்வா், ஐடிஐ, வட சென்னை (மின்ட்) என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.








