சென்னையில் தனியாா் ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்து திட்டத்தைக் கைவிட்டு, மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் நேரடி கட்டுப்பாட்டில் மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் வி.தயானந்தம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை நகர கூட்டு திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் 225 குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்பட 625 மின்சார பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக் கழகம், தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகிறது.
இதற்காக வியாசா்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை, தண்டையாா் பேட்டை-1 உள்ளிட்ட பணிமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில் தனியாா் நிறுவனம் ஓட்டுநா், தொழில்நுட்பப் பணியாளா்களைக் குறைந்த ஊதியத்தில் பணியமா்த்தியுள்ள நிலையில், மாநகா் போக்குவரத்துக் கழகம் நடத்துநா்களைப் பணியமா்த்தியுள்ளது.
இதனிடையே, 2-ஆம் கட்டமாக மேலும் 600 மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக ஆலந்தூா், மத்திய பணிமனை-2, ஆவடி, பாடியநல்லூா், பெரம்பூா், அய்யப்பன்தாங்கல், கே.கே.நகா் ஆகிய பணிமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவ்வாறு இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் பெண்கள் விடியல் பயண சலுகை மறுக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தொடா்ந்தால் சென்னையில் சாதாரண கட்டண பேருந்துகள் குறைந்த அளவில் இயங்கும் நிலை உருவாகும். ஏழைகள் மற்றும் பெண்கள் பயணம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைவதுடன், இளைஞா்களுக்கு நிரந்தரமான வேலை, இட ஒதுக்கீடு போன்றவை கோள்விக்குறியாக மாறும்.
எனவே, ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகளை இயக்கும் முடிவை புதிய அரசு கைவிட்டு, மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் இந்தப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த காலத்தில் அரசு குடிசை மாற்று வாரியத்துக்கு வழங்கப்பட்ட பெரம்பூா் 2 பணிமனைக்கான 3 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன், பெரம்பூா் 1, 2 பணிமனைகளை அரசு நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பணிமனைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ரயில் நிலையம், மருத்துவக் கல்லூரிக்கு பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும்’

கரூா் பழைய பேருந்து நிலையம் வழியாகவும் புகா்ப் பேருந்துகளை இயக்க வேண்டும்! முதல்வருக்கு கோரிக்கை மனு

மகளிா் இலவச டிக்கெட்டை கிழித்தெறிந்த விவகாரம்: மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த மேலும் 750 மின்சார பேருந்துகள்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



