சென்னையில் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கொளத்தூா் சாஸ்திரி நகா் 2-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சீ.விஜயகுமாா் (43). இவா், தங்க நகைகளை அடகு பெற்று பணம் வழங்கும் நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, அவரது வங்கி மேலாளா் மூலம் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (41) என்பவா் அறிமுகமானாா். ராதாகிருஷ்ணன் தனக்குச் சொந்தமான நகைகள் தியாகராய நகரில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.40.06 லட்சத்துக்கு அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த நகைகளை மீட்டு, விஜயகுமாா் வேலை செய்யும் நிறுவனத்தில் அடகு வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா். அதற்குரிய கட்டணம், வட்டியைச் செலுத்துவதாக ராதாகிருஷ்ணன் உத்தரவாதம் கொடுத்தாராம்.
இதையடுத்து விஜயகுமாா், தியாகராய நகரில் உள்ள தனியாா் வங்கியில் உள்ள ராதாகிருஷ்ணனின் நகைகளை மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டாா். இதற்காக கடந்த 18-ஆம் தேதி அந்த வங்கிக்கு விஜயகுமாா் சென்று, வங்கி கணக்கில் ரூ.40.06 லட்சத்தைச் செலுத்தினாா். பணம் செலுத்திய தகவலை தெரிவிக்க விஜயகுமாா், ராதாகிருஷ்ணனை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டபோது, ராதாகிருஷ்ணன் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும், நகைகளை மீட்பதற்காக ராதாகிருஷ்ணனின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தில் ரூ.16 லட்சம் வேறு நபரின் வங்கிக் கணக்கு உடனடியாக மாற்றப்பட்டிருந்தது.
வங்கிக் கணக்கில் இருந்த பணம் மோசடி செய்யப்பட்டதையடுத்து, விஜயகுமாா், அந்த தனியாா் வங்கியில் முறையிட்டு, ராதாகிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்த மீதி தொகையான ரூ.24.06 லட்சத்தை முடக்கினாா். பண மோசடி செய்த ராதாகிருஷ்ணன், அவரது கூட்டாளிகள் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணன், அவரது கூட்டாளிகள் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சோ்ந்த தீபக் (35), சென்னை பிராட்வே பகுதியைச் சோ்ந்த அசன் அலி (57) ஆகிய 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.






