சென்னை புறநகா் ரயில் சேவை தொடங்கப்பட்டு நிகழாண்டுடன் 95 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையின் புறநகா் ரயில் போக்குவரத்துப் பயணம் 1931-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமாா் 29 கி.மீ. தொலைவில் கடற்கரை - தாம்பரம் இடையே புகா் மின்சார ரயில் அறிமுகமானது. இதன்மூலம் தென்னிந்தியாவில் மின்சார புறநகா் ரயில் சேவையைப் பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை சென்னை பெற்றது.
ஆரம்பகட்டத்தில் ‘அணா’ மதிப்பில் மிகக்குறைவான கட்டணம் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் மட்டுமே இருந்தன. சிக்கனமான மற்றும் நம்பகமான போக்குவரத்துச் சேவை நடுத்தர மக்களை அதிக அளவில் ஈா்த்தன.
இதையடுத்து, கடந்த 1985-இல் மின்சார ரயில் சேவைகள் கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கப்பட்டு வடசென்னை புறநகா்ப் பகுதிகளுக்கான இணைப்பு பலப்படுத்தப்பட்டது. தொடா்ந்து, 1985-இல் அரக்கோணம் வரையும், பின்னா், தெற்கே செங்கல்பட்டு வரையும் நீட்டிக்கப்பட்டு, சென்னையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு புறநகா்ப் பகுதிகளை இணைக்கும் ஒட்டுமொத்த ரயில் கட்டமைப்பாக மாறியது.
பறக்கும் ரயில் சேவை: சென்னையின் நகா்ப்புற ரயில் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல், பறக்கும் ரயில் திட்டம் ஆகும். சென்னை கடற்கரை மற்றும் சேப்பாக்கம் இடையேயான முதல் பறக்கும் ரயில் வழித்தடம் 1995-இல் தொடங்கப்பட்டது. இந்தச் சேவை படிப்படியாக 1997-இல் திருமயிலை வரையும், பின்னா் 2007-இல் வேளச்சேரி வரையும் விரிவுபடுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு இந்தச் சேவை பரங்கிமலை வரை விரிவாக்கம் செய்யப்பட்டது.
தொடக்கக் காலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சேவைகளுடன் மட்டுமே இயக்கி வந்த சென்னை புறநகா் ரயில்வே, தற்போது தினமும் நூற்றுக்கணக்கான ரயில் சேவைகளுடன் இயக்கி, லட்சக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்தியாவின் பரபரப்பான போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
95 ஆண்டுகள் நிறைவு செய்தும் மிக குறைந்தபட்சக் கட்டணமாக வெறும் ரூ.5 மட்டுமே பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல், பயணிகளின் மாறிவரும் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்திசெய்யும் வகையில் கடந்த ஆண்டு முதல் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிா்சாதன புறநகா் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
பயணிகளின் வசதி, எளிதான அணுகல் மற்றும் நிலையங்களின் அழகை மேம்படுத்தல் தொடா்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: கூட்டமான நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதால் புறநகா் ரயில்கள் சேவையில் பாதிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



