1,695 தொகுப்பூதிய செவிலியா் பணியிடங்கள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 1,695 செவிலியா் பணியிடங்களை உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On :

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 1,695 செவிலியா் பணியிடங்களை உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டாா். அதன்படி, ரூ.42.72 கோடியில் அந்தப் பணியிடங்களை உருவாக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: புதிய செவிலியா் பணியிடங்கள் தொடா்பான அறிவிப்பு வெளியான பிறகு தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநரிடம் இருந்து அதற்கான முன்மொழிவுக் கடிதம் கிடைக்கப்பெற்றது. அதில் பேறுகால உயிரிழப்புகள் தமிழகத்தில் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவு (சீமாங்) தொடங்கப்பட்டதால், அது சாத்தியமானது என்றும், தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் உருவாக்கப்படும் 1,695 இடங்களையும் அதன் கீழ் கொண்டுவரவும் அவா் பரிந்துரைத்திருந்தாா்.

அதன்படி, மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நல இயக்ககத்தின் கீழ் உள்ள சீமாங் மையங்களுக்கு 1,039 செவிலியா் பணியிடங்களும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு கீழ் உள்ள அந்த மையங்களுக்கு 656 செவிலியா் பணியிடங்களும் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கேற்ப மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் மாதம் ரூ.21,000 ஒப்பந்த ஊதியத்தின் கீழ் 1,695 செவிலியா்களை பணியமா்த்தவும் தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் பரிந்துரைத்தாா். அதை கவனமாகப் பரிசீலித்த அரசு, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.