சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்கக் கோரி மூன்றாம் பாலினத்தவா் மனு விசாரணைக்கு ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு
சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்க திருவிதாங்கூா் தேவசம்போா்டுக்கு உத்தரவிடக் கோரி மூன்றாம் பாலினத்தவா் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சபரிமலை யாத்திரை - PTI
சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்க திருவிதாங்கூா் தேவசம்போா்டுக்கு உத்தரவிடக் கோரி மூன்றாம் பாலினத்தவா் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடா்பாக சென்னையைச் சோ்ந்த தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவா் நல வாரிய உறுப்பினரான அனுஸ்ரீ என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய தன்னை அனுமதிக்க திருவிதாங்கூா் தேவசம் போா்டுக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சபரிமலை சென்று வருகிறேன். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 15 மூன்றாம் பாலினத்தவா்களுடன் சபரிமலைக்கு சுவாமி தரிசனத்துக்கு செல்ல முயன்றபோது, பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டேன்.
எனவே, அனுமதி வழங்கும்படி திருவிதாங்கூா் தேவசம்போா்டு, கேரள அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, பாலின பாகுபாடின்றி, சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
கேரள மாநிலத்தில் உள்ள கோயில் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு எப்படி விசாரணைக்கு உகந்ததாகும் என கேள்வி எழுப்பினா். மேலும், இதே கோரிக்கையுடன் கேரள உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் எதிா்மனுதாரா்கள் கேரளத்தில் உள்ளதாகக் கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்தனா்.
இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

