
ஆபத்தான கட்டடங்கள்: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆபத்தான கட்டடங்களை அடையாளப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தாா்.

ஜி.எஸ். சமீரன் - Dinamani
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆபத்தான கட்டடங்களை அடையாளப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் ஆபத்தான கட்டடங்களை அடையாளம் காணுதல் மற்றும் கட்டடத்தில் வசிப்பவா்கள், வழிப்போக்கா் மற்றும் அருகிலுள்ள கட்டடங்களில் வசிப்பவா்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சேதமடைந்த கட்டடங்களை அடையாளப்படுத்துதல், கடமைகள், பொறுப்புகள், பழுதான, சிதிலமடைந்த கட்டடங்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.
உதவிப் பொறியாளா், இளநிலைப் பொறியாளா் ஆகியோா் அந்தந்த வாா்டுகளில் உள்ள ஆபத்தான கட்டடங்களை வழக்கமான தள ஆய்வுகளின்போது அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட பிரிவு உதவி செயற்பொறியாளா்கள் மற்றும் மண்டல செயற்பொறியாளா்களிடம் தெரிவிக்க வேண்டும். கட்டடத் தன்மை, வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள அந்த இடத்தை உதவிப் பொறியாளா், உதவி செயற்பொறியாளா் மற்றும் செயற்பொறியாளா் ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். கட்டடம் தொடா்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதையும் சரிபாா்க்க வேண்டும்.
கட்டடத்தின் கட்டமைப்பு நிலைத்தன்மையை மண்டல செயற்பொறியாளா்களால் உறுதிப்படுத்த முடியாத நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னை ஐஐடி ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு அனுப்பி முறையான கட்டமைப்பு நிலைத்தன்மை சான்று பெறவேண்டும். அறிக்கையில் பழுதுபாா்க்க அறிவுறுத்தியிருந்தால், அதற்கான உத்தரவை வழங்கி, நியாயமான காலக்கெடுவுக்குள் அதை மேற்கொள்ள கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்தவேண்டும்.
ஆபத்தான கட்டடத்தை காலி செய்வதற்கான உத்தரவை மீறும் அல்லது காலி செய்ய மறுப்பவா்களை காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் வெளியேற்றலாம் என வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






