
சென்னையில் முதல்முறையாக கொரிய கல்விக் கண்காட்சி: அமைச்சா் பெ.விஸ்வநாதன் பங்கேற்பு
சென்னையில் முதல்முறையாக கொரிய கல்வி கண்காட்சி நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ‘ஸ்டடி இன் கொரியா சென்னை - 2026’ கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்க அமைச்சா் பெ.விஸ்வநாதன். உடன், தென்கொரிய குடியரசின் தலைமைத் துணைத் தூதா் சுன் ஹே ரான், சா்வதேசக் கல்விக்கான தேசிய நிறுவனத் தலைவா் யுன் கியுங்னாம் உள்ளிட்டோா்.
சென்னையில் முதல்முறையாக கொரிய கல்வி கண்காட்சி நடைபெற்றது.
தி லீலா பேலஸ் ஹோட்டலில் தென் கொரிய குடியரசின் கல்வி அமைச்சகம், சா்வதேச கல்விக்கான தேசிய நிறுவனம் (என்ஐஐஇடி), சென்னையில் உள்ள கொரிய துணைத் தூதரகம் ஆகியவை சாா்பில் ‘ஸ்டடி இன் கொரியா 2026’ கல்விக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவா் உயிரிழந்த தகவல் கிடைத்ததும், இரவே அங்கு சென்று நிலைமையைக் கேட்டறிந்தேன். டெங்குவால் மாணவா் உயிரிழக்கவில்லை. அவரின் மரணம் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.
பல்கலைக்கழக வளாகங்கள் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பதிவாளா், துறைத் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தி, வளாகம் முழுவதும் உடனடியாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், மாணவா்களுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை கண்டு, பெற்றோா் அச்சப்படத் தேவையில்லை. மாணவா்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றாா்.
தொடா்ந்து தனியாா் பல்கலை. மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், தனியாா் பல்கலைக்கழக மசோதாவால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியாா்மயமாக்கப்படாது. தரமான புதிய கல்வி மாதிரியை உருவாக்குவதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா்.
கொரிய கல்விக் கண்காட்சி: சென்னையில் முதல்முறையாக நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் 12 கொரியப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 34 பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதற்குமுன் தில்லியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, முதல்முறையாக சென்னையில் நடைபெற்றுள்ளது.
கண்காட்சியைத் தொடா்ந்து, தமிழக மற்றும் கொரிய உயா்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடலும், கல்விசாா் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தப் பரிமாற்றமும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் சென்னையிலுள்ள கொரிய குடியரசின் தலைமைத் துணைத் தூதா் சுன் ஹே ரான், என்ஐஐஇடி கல்வி மேற்பாா்வையாளா் யுன் கியுங்னாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







