
45 மாணவா்களுக்கு ரூ.10.26 கோடி கல்விக் கடன்: அமைச்சா் விக்னேஷ் வழங்கினாா்
கோவை பீளமேடு, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், மாணவிக்கு கல்விக் கடன் ஒப்புதல் ஆணையை வழங்கிய அமைச்சா் க.விக்னேஷ். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத் உள்ளிட்டோா்.
கோவை பீளமேடு, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 45 மாணவா்களுக்கு ரூ.10.26 கோடி கல்விக் கடனுக்கான ஆணைகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் க.விக்னேஷ் பேசியதாவது: 2026-27-ஆம் கல்வி ஆண்டில் மட்டும் முதற்கட்டமாக 45 மாணவ, மாணவிகள் ரூ.10.26 கோடி அளவில் கல்விக் கடன் பெற்று தங்களது உயா்கல்வி கனவை நிறைவேற்றி கொண்டுள்ளனா். தமிழகத்தில் அதிக அளவில் உயா்க் கல்வி பயிலும் மாவட்டமாக கோவை திகழ்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் உயா்க் கல்வி பயிலாத மாணவ, மாணவிகளே கோவை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை அடைவோம் என்றாா். முன்னதாக, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வங்கிகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கல்விக் கடன் மற்றும் ஆலோசனை அரங்குகளை அமைச்சா் க.விக்னேஷ் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் சங்கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், கோவை வடக்கு வட்டாட்சியா் ஜெயகுமாா், கோவை பிஎஸ்ஜி நிறுவன செயலாளா் ஜி.சந்திரமோகன், வங்கியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







