காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்படும் என்று விஸ்வநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் மாநில அரசு மூலம் மாவட்டங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க மாவட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டி.ஆர். பாலுவும், துணைத் தலைவராக காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பெ. விஸ்வநாதனும், செயலாளராக மாவட்ட ஆட்சியரும் உள்ளனர்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகர்மன்ற, ஊராட்சி, ஒன்றிய, பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். 3 மாதங்களுக்கு ஒரு முறை இக்குழு கூடி மத்திய அரசு திட்டத்தின் செயல்பாடு குறித்து விவாதிக்கும். மேலும் அதில் உள்ள குறைபாடுகள், மாவட்டத்தில் எட்டியுள்ள இலக்குகள் குறித்தும் பேசப்படும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இக்கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 2011 ஜூலை 21-ஆம் தேதி மாவட்டக் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த இரு ஆண்டுகளாக இக்கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், மே 13-ம் தேதி மாவட்டக் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன், குழுவின் தலைவர் டி.ஆர். பாலு, துணைத் தலைவர் பெ. விஸ்வநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் இக்கூட்டத்தை ஒத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர், பெ. விஸ்வநாதன் எம்.பி. உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஆட்சியர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சட்டப்பேரவைக் கூட்டம் இப்போது நடைபெற்று வருகிறது. எனவே பேரவை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். அதன் அடிப்படையில் மே 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
குழுத் தலைவருடன் கலந்து ஆலோசனை செய்து மீண்டும் இக்கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் எனக் கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஸ்வநாதன் எம்.பி. கூறியது:
கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெறும் தேதியை முடிவு செய்த போது, சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாதா? பேரவைக் கூட்டம் நடைபெறுவதால், அந்தத் தேதியில் எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்ள இயலாது என்று தெரிந்தும், மே 13-ஆம் தேதி கண்காணிப்புக் குழு கூட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது.
இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டத்தில் அரசு இயந்திரம் முடங்கிக் கிடக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
எனவே செயல்படாத மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







