சிமென்ட் வழங்கப்படாததால் தொகுப்பு வீடுகள் கட்டும் பயனாளிகள் அவதி
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக கடந்த 4 மாத


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக கடந்த 4 மாத காலமாக சிமென்ட் வழங்கப்படாததால் பயனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வீடு இல்லாதவர்கள், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் மாநில அரசு சார்பில் பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்கள் மூலம் வீடு இல்லாத, குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட அளவுகளில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் இத்திட்டங்களின் மூலம் வீடுகள் கட்ட சிமென்ட், இரும்புக் கம்பிகள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டப் பயனாளிகளுக்கு 56 சிமென்ட் மூட்டைகளும், பசுமை வீடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகளுக்கு 108 சிமென்ட் மூட்டைகளும் வழங்கப்படும்.
அதேபோல் இரும்புக் கம்பிகளின் அளவும் மாறுபடும். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 கிராம பஞ்சாயத்துகளில் 2015-2016-ஆம் நிதியாண்டில், வீடுகள் வழங்கும் திட்டத்தில் 350 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பயனாளிகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் சிமென்ட், இரும்புக் கம்பிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் மூலமாக வழங்கப்படும் சிமென்ட், கடந்த நான்கு மாதங்களாக வராததால், தொகுப்பு வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு சிமென்ட் மூட்டைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி கடந்த நான்கு மாதங்களாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து பயனாளிகள் கூறியதாவது:
தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் பல வீடுகள் தற்போது தளம் போடும் நிலையில் உள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வழங்கப்படும் சிமென்ட் வழங்கப்படாததால் கடந்த நான்கு மாதங்களாக தளம் போடாமலும் அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாமலும் உள்ளது என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக சிமென்ட் வரவில்லை. ஆனால் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளோ எப்போது தளம் போடுவீர்கள் என நச்சரிக்கின்றனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...