மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான வரலாற்றுத் தகவல்களைக் கூறி ஏமாற்றக் கூடாது என சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலாத் துறை அறிவுறுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்வதேச வரலாற்று சுற்றுலா மையமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், மற்ற மாநிலங்கள் உள்ளிட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இங்கு வரும் பயணிகளை சுற்றிக் காட்டுவதற்கு வழிகாட்டிகள் அதிகமான கட்டணம் வசூலிப்பதாகவும், வரலாற்றை திரித்துக் கூறி ஏமாற்றுவதாகவும் மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து, அந்த அலுவலகத்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா வழிகாட்டிகளையும் அழைத்து சுற்றுலாத்துறை அதிகாரி எஸ்.சக்திவேல் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழிகாட்டிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் குறித்து அறிவுரைகளை வழங்கி அவர் பேசியது:
மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இங்குள்ள வழிகாட்டிகள் புராதனச் சின்னங்களை சுற்றிக் காட்டும்போது உண்மையான, சரியான வரலாற்றுத் தகவல்களைக் கூறி அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். தவறான தகவல்களைக் கூறி சுற்றிக் காட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா வழிகாட்டிப் புத்தகத்தில் உள்ள பல்லவர் வரலாற்றை முழுமையாகப் படித்து, அதன்படி வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக் கூறி பயணிகள் ரசிக்கும் வகையில் வழிகாட்ட வேண்டும்.
வழிகாட்டும் பணிக்குச் செல்லும் வழிகாட்டிகள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் மது அருந்திவிட்டுச் செல்லக் கூடாது. கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காட்டும்போது ஒவ்வொரு வழிகாட்டியும் முறையான கட்டணத்தை நிர்ணயம் செய்து பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். வழிகாட்டி பணிக்குச் செல்பவர்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் மூத்த சுற்றுலா வழிகாட்டி ஆலோசகர்
எம்.கே.சீனிவாசன், வழிகாட்டிகள் சங்க நிர்வாகிகள் டி.ராஜேந்திரன், யு. யுவராஜ், வ.பாலன் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள், சுற்றுலாத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







