காஞ்சிபுரத்திலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ், ஆண்டுதோறும் டிசம்பர் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், காஞ்சிபுரத்தில் வந்தவாசி சாலையில் உள்ள தூய இருதய அன்னை தேவாலயத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வேளையில் காஞ்சிபுரம் மறைமாவட்ட பாதிரியார்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, 24-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் கூடியிருந்த கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தியபடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையிலும் கத்தோலிக்க, சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டு, கிறிஸ்தவர்கள் இயேசு பிரான் பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் வண்ண விளக்குகள், பலூன்கள், அலங்கார நட்சத்திரங்களால் ஜொலித்தன. மேலும், தேவாலயத்தின் வளாகங்களில் குழந்தை இயேசு, அன்னை மரியாளின் மடியில் இருப்பது போல் சிறப்புக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். காலை வேளையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள், கேக் வழங்கி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருத்தது.
செங்கல்பட்டு தேவாலயங்களில்...
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூடங்களில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நகரில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் சகோதரி நிர்மலா ஏற்பாட்டில் குடில்கள் அமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயம், ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஏழாம் நாள் திருச்சபை, செங்கல்பட்டு அருகே உள்ளி அக்னி அசெம்பிளி, அளகேச நகர் பெந்தகொஸ்தே தேவாலயங்கள், வல்லம் குழந்தை ஏசு தேவாலயம், புதுப்பட்டினம், கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூடங்களில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியணிந்தும், புத்தாடைகள் அணிந்தும் வந்து உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
மால்லபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்திலும், தனியார் நட்சத்திர விடுதிகளிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை வாங்கித் தலையில் அணிந்தபடி சுற்றுலாப் பகுதிகளை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







