

செங்கல்பட்டு பழைய ஜிஎஸ்டி சாலையில் குண்டூர் ஏரி பகுதியையொட்டி அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்த சமூக விரோதிகள் அங்கு குப்பைகளைக் கொளுத்தியதால் அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்து சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தப் பள்ளிக்கென விளையாட்டு மைதானம் அமைக்க கடந்த 2007ஆம் ஆண்டில் நகரமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி கல்வி நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது. சுமார் 70 செண்ட் அளவிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தைச் சுற்றி காம்பவுண்டும் அமைத்தனர். நுழைவாயிலில் கேட்டும் அமைக்கப்பட்டது.
அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இடத்திற்கான கேட் சாவி, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் பள்ளியின் சிறிய வளாகத்திலேயே உடற்பயிற்சி வகுப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த வார்தா புயலின்போது சாலைகளில் விழுந்த மரங்களின் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கொண்டு வந்து இந்த விளையாட்டு மைதானத்தில் கொட்டிச்சென்றனர். பின்னர் அந்த கழிவுகள் எடுக்கப்படாமல் துர்நாற்றம் வீசியபடி இருந்தது.
கடந்த ஆண்டில் இந்த விளையாட்டு மைதானத்தில் சமூக விரோதிகளின் விஷமத்தால் இந்த மைதானத்தில் இரவு நேரத்தில் திடிரென தீப்பிடித்து எரிந்தது. குண்டூர், அனுமந்தபுத்தேரி, ராமபாளையம், அண்ணா சாலை, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாயினர்.
அப்போது அப்பகுதியில் வசித்துவந்த நீதிபதி, முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் கிரிபாபு உள்ளிட்டோர் தீயணைப்புத் துறைக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல்கொடுத்தனர். அதன் பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
எனினும், அந்தத் தீயின் புகை தொடர்ந்து 4 நாள்களுக்கு பரவிக் கொண்டிருந்தது.
அதன் பின்னர் மைதானத்தின் சுற்றுச்சுவர் வாயில் கேட் உடைக்கப்பட்டது. மீண்டும் அங்கு நகராட்சிநிர்வாகம் குப்பைகளை கொட்டிவருவதால் மக்கள் அந்தபகுதியில் நடமாடமுடியாத அளவிற்கு நுர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில் இந்த மைதானத்துக்கு இரவு நேரத்தில் வரும் சமூக விரோதிகள் அங்கு தங்கி மது அருந்துகின்றனர். புகை, கஞ்சா ஆகியவற்றைப் புகைக்கின்றனர். தவிர, அந்த மைதானத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சமூக விரோதிகள் இந்த மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு புகை பிடித்தனர்.
அதன் பின் இங்கு தீயை பற்ற வைத்து விட்டுச் சென்றனர். அங்கு தீப்பற்றி எரிவது கூட தெரியாமல் இருளர் குடும்பத்தினர் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் அவர்களை எழுப்பிக் காட்டினார். இதையடுத்து எழுந்த அவர்கள் தங்கள் துணிகள் உள்ளிட்ட உடைமைகளை எடுத்தனர். சனிக்கிழமை வரை தீ அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. தீயை அணைக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியது: குண்டூர், ராமபாளையம் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் குடிப்பதற்காக சிலர் வருகிறார்கள் , கேட்டால் மிரட்டுகின்றனர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. எங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்த விளையாட்டு மைதானத்தை, கூடைப்பந்து அமைப்பினரும், சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சீரமைத்துத் தர முன்வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் மோக்கினால் பள்ளி மாணவர்களால் இந்த மைதானத்தைப் பயன்படுத்த முடியவில்லை.
நகராட்சி நிர்வாகத்தால் மைதானத்தை சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க முடியவில்லை. காவல்துறையினரும் இப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் இந்த மைதானம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
நகராட்சியின் கல்வி நிதி விரயமானதுதான் மிச்சம். இனியாவது இந்த விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.