எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லாபம் தரும் தந்தூரி பானை தயாரிப்பு...!

மண்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழில் நலிவுற்று வரும் வேளையில், தந்தூரி பானை தயாரிப்பு தற்போது இத்தொழிலைச் செய்பவர்களுக்கு அதிக லாபம் மற்றும் தொடர் வேலை

News image
Updated On :23 அக்டோபர் 2018, 10:48 pm

எல். ஐயப்பன்


மண்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழில் நலிவுற்று வரும் வேளையில், தந்தூரி பானை தயாரிப்பு தற்போது இத்தொழிலைச் செய்பவர்களுக்கு அதிக லாபம் மற்றும் தொடர் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இதனால் மண்பாண்டங்களை உற்பத்தி செய்பவர்கள் தந்தூரி பானை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஏரிகளில் களிமண் எடுக்கத் தடை உள்ளதாலும், மண்பாண்டங்களை உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் உள்ளதாலும், மண்பாண்டங்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியாத காரணத்தாலும், உடல் உழைப்பு அதிகமான இத்தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பலரும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றச் சென்று விட்டனர். இத்தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர், பிற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனால் கிராமப் பகுதிகளில் மண்பாண்டங்களை உற்பத்தி செய்வது தற்போது அரிதாகி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் அடுப்புகள் மூலமாகவே சமையல் செய்து வந்தனர். இதனால் மண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், அடுப்புகள் உள்ளிட்ட சமையல் பொருள்களையும், அகல் விளக்குகள், திருஷ்டி பொம்மைகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றையும் மண்பாண்டத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்து விற்று வந்தனர். தற்போது நகரங்களைப் போல் கிராமப்புறப் பகுதிகளிலும் பெரும்பாலான வீடுகளில் எரிவாயு அடுப்புகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
இதனால் மண்பாண்டங்களை வாங்க ஆள் இல்லாததால் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் இத்தொழிலை விட்டுவிட்டு மற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விற்பனைக் குறைவு, அதிக லாபமின்மை, வேலைவாய்ப்பு குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மண்பாண்டத் தொழிலாளர்கள் நலிவுற்று இருந்தனர். இந்நிலையில், தந்தூரி பானை தயாரிப்பு தற்போது இத்தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றியுள்ளது. தந்தூரி பானை தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இவ்வகைப் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(45) கூறியது:
நாங்கள் தலைமுறை தலைமுறையாக மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் கண்டிவாக்கம் பகுதியில் உள்ள எங்களது குடும்பத்தினர் மட்டுமே தற்போது தந்தூரி பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். நகரப்பகுதிகளில் உள்ள உணவங்களில் இந்த தந்தூரி பானை தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தப் பானைகளை 6 மாதம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அவற்றைச் செய்வதற்கான ஆர்டர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக வருகின்றன. இதனால் எங்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. 
இரண்டு அடி அகலமும், மூன்று அடி உயரமும் உள்ள தந்தூரி பானைகள் ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும், இரண்டரை அடி அகலமும், மூன்று அடி உயரமும் உள்ள தந்தூரி பானைகள் ரூ.1000 முதல் ரூ.1500 வரைக்கும், மூன்றரை அடி அகலமும், மூன்று அடி உயரமும் கொண்ட தந்தூரி பானைகள் ரூ.1500 முதல் ரூ.2000 வரையும் விற்பனைகின்றன. இதனால், எங்களுக்கு அதிக அளவில் லாபம் தரும் தொழிலாக தற்போது இத்தொழில் திகழ்கிறது. 
மாதத்திற்கு 30 தந்தூரி பானைகள் வரை விற்பனை செய்யப்படுவதால் தற்போது எங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. உணவகங்களுக்குத் தேவைப்படும் தந்தூரி பானைகளை வாங்க தனியார் ஏஜெண்டுகள் சிலர் எங்களுக்கு ஆர்டர்களை வழங்கி வருகின்றனர். 
இதனால் எங்களை விட ஏஜெண்டுகளே அதிக லாபம் பார்த்து வருகின்றனர். 
எனவே, நேரடியாகவே உணவங்களுக்கு தந்தூரி பானைகளை விற்பனை செய்ய நான் முயற்சி செய்து வருகிறேன். 
இது தவிர, மண் அடுப்புகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றையும் நாங்கள் உற்பத்தி செய்து வருகிறோம். அவற்றை காஞ்சிபுரம் போன்ற பெரிய நகரங்களில் மண் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வதாலும் தற்போது இத்தொழில் லாபகரமான தொழிலாக விளங்குகிறது.
எனினும், இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட களிமண் முக்கியம். தற்போது ஏரிகளில் மண் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் பானைகள் செய்யப் பயன்படும் மூலப் பொருளான களிமண் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. இதனால் தனியார் மண் குவாரிகளில் இருந்து அதிக விலைக்கு மண்ணை வாங்கி வருகிறோம். மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமிழக அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். அவ்வாறு அடையாள அட்டை பெற்றவர்களுக்கு ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் மண்பாண்டத் தொழிலில் அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.