கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கழிவுநீர் கலந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் குளம் சீரமைக்கப்படுமா?

மதுராந்தகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் குளத்தில் கழிவுநீரும், மழை வெள்ள நீரும் கலந்து குளம் மாசடைந்துள்ளது.

Published On :

மதுராந்தகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் குளத்தில் கழிவுநீரும், மழை வெள்ள நீரும் கலந்து குளம் மாசடைந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு தகவல் தெரிந்தும், எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுராந்தகம் நகரின் முக்கிய வீதியாக இருப்பது செட்டித் தெரு. இங்கு சுமார் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் இந்தக் கோயிலின் பின்புறம் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. மிகவும் புனிதம் வாய்ந்த நீராக இக்குளத்து நீர் கருதப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் பயன்பட்டு வந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுவாமி தரிசனத்துக்கு முன்பு நீராட இக்குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் வைகாசி மாத விசாக நட்சத்திரத் திருவிழாவின்போது தெப்ப உற்சவம் நடைபெற்று வந்தது. அதன் பிறகு அவ்விழா இன்று வரை நடைபெறவில்லை. குளத்தின் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் வீடுகளைக் கட்டி, வசித்து வருகின்றனர். 
கோயில் நிலமான குளக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ள நபர்களுக்கு ஓட்டு வங்கிக்காக ஆளும்கட்சியினர் தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி உதவி செய்து வருகின்றனர். வருவாய்த்துறை, மின்வாரியம், நகராட்சி போன்ற துறைகளின் அதிகாரிகளை மிரட்டி, இந்த நபர்களின் வீடுகளுக்கு மின்வசதி, குடிநீர், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர். 
குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகட்டி வசிப்போர் குப்பை கொட்டுவதாலும், குளத்துக்குப் பின்புறம் உள்ள அரசு பொது மருத்துவமனையின் கழிவுகளும் கோயில் குளத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் படிப்படியாக குளத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. 
அது மட்டுமல்லாமல் செடி, கொடிகள் அடர்ந்து பரந்தும், ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்தும், குளத்து நீரே தெரியாமல் தற்சமயம் பாசி படர்ந்த நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் குளத்தின் நீரை புனித நீராக கருதி முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யவும், கோயிலின் உள்புறம் கழுவி சுத்தம் செய்யவும் அதைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. 
தவிர, நகரின் முக்கிய வீதிகளான தேரடி வீதி, செட்டித் தெரு, வடராயன் தெரு போன்றவற்றில் வசிப்பவர்களின் வீட்டுக் கழிவுநீர் செல்லும் கழிவுநீர்க் கால்வாய் இந்த குளத்தினை ஒட்டிச் செல்கிறது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் வந்த வெள்ள நீர் அப்பகுதியில் உள்ள தாழ்வான வீடுகளுக்குள் செல்வதை தடுக்க குளத்துக்கு அருகே கழிவுநீர் கால்வாய்ப் பகுதியை வெட்டினர். இதனால் மொத்த கழிவுநீரும், மழை வெள்ளநீரும் அடைக்கலமாகும் குட்டையாக கோயில் குளம் மாறி விட்டது. 
குளத்தின் அருகில் அரசு கிளை நூலகம், தனியார் மருத்துவமனை, கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. குளத்து நீரினால் துர்நாற்றம் வீசுவதால் இக்கோயிலுக்கு செல்லவோ, அருகில் உள்ள நூலகத்தில் படிக்கச் செல்லவோ பலரும் தங்குகின்றனர். 
கொசுக்களை உற்பத்தி செய்யும் நீர்நிலையாக இந்தக் குளம் மாறி விட்டதால், இப்பகுதி மக்கள் கொசுக்கடியால் டைபாய்டு, மலேரியா போன்றவற்றின் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 
எனவே கோயில் குளத்தின் புனிதத்தைக் கருதி அதைச் சீர்செய்து தருமாறு பலமுறை இந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தும், இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இக்குளத்தின் அவல நிலையைப் போக்க அறநிலையத் துறையினர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.