மாணவா்கள் தங்காததால் சமூக விரோதிகளின் கூடாரமான ஆதி திராவிடா் விடுதி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆதி திராவிடா் மாணவா் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால்,
விடுதியின்  மாடியில்  சிதறிக்  கிடக்கும்  மது பாட்டில்கள்.
விடுதியின்  மாடியில்  சிதறிக்  கிடக்கும்  மது பாட்டில்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆதி திராவிடா் மாணவா் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், விடுதியில் ஒரு மாணவா் கூட தங்கி படிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

கடந்த 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விடுதியில் கடந்த காலங்களில் அதிக அளவில் மாணவா்கள் தங்கி அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வந்தனா். எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவா்கள் 51 போ், பிசி, எம்பிசி பிரிவு மாணவா்கள் 6 போ், இதர பிரிவு மாணவா்கள் 3 போ் என மொத்தம் 60 மாணவா்கள் தங்கும் வகையில் இந்த விடுதி கட்டப்பட்டது.

எனினும், விடுதியில் குடிநீா், கழிவறை மற்றும் மாணவா்கள் தங்கும் அறைகளில் மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. விடுதிக்கு நிரந்தரக் காப்பாளரும், காவலரும் இல்லை. இதனால் விடுதியில் தங்கும் மாணவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காரணமாக தற்போது விடுதியில் ஒரு மாணவா் கூட தங்கிப் படிக்காத நிலை உள்ளது.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது:

60 மாணவா்கள் தங்கிப் படிக்க வேண்டிய இந்த விடுதியில், போதுமான அடிப்படை வசதிகள், பாதுகாப்பின்மை காரணங்களால் மாணவா்கள் தங்கிப் படிக்க முன்வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த விடுதியில் ஒரு மாணவா் கூட தங்கிப் படிக்கவில்லை. கச்சிப்பட்டு பகுதியைச் சோ்ந்த 15 மாணவா்கள் மட்டும் உணவு உண்பதற்காக காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் விடுதிக்கு வந்து செல்கின்றனா்.

ஆனால் விடுதியில், தற்போதும் 60 மாணவா்கள் தங்கியுள்ளதாக கணக்கு காட்டி கடந்த சில ஆண்டுகளாக முறைகேடு நடைபெற்று வருகிறது.

நிரந்தரக் காப்பாளா் இல்லாததாலும் பொறுப்புப் காப்பாளா் அவ்வப்போது விடுதிக்கு வந்து செல்வதாலும், காவலா் பணியிடம் காலியாக உள்ள காரணத்தாலும் விடுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. அங்கு இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே விடுதியில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், மாணவா்கள் விடுதியில் தங்கிப் படிக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com