கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத தொழிலாளர் ஓய்வறைகள்

குன்றத்தூரை அடுத்த எழிச்சூர் கிராமத்தில் ரூ.14.90 கோடியில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கான
கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத தொழிலாளர் ஓய்வறைகள்



குன்றத்தூரை அடுத்த எழிச்சூர் கிராமத்தில் ரூ.14.90 கோடியில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னை, சென்னை புறநகர், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் ஓய்வறைகள் கட்டப்படும் என கடந்த 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட எழிச்சூர் கிராமத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் சார்பாக ரூ.14.90 கோடியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டுவதற்கான பணிகள் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 
இங்கு கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தூங்கும் அறைகளுடன், அம்மா உணவகம், சுகாதார மையம்,  கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம், முதியோர் மையம், பூங்கா, நூலகம், வங்கி சேவை மையம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் வகையில் கட்டடம் கட்டப்பட்டது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. 
திறந்து வைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிய நிலையில், தற்போது வரை இந்த அறைகள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து கட்டுமானத் தொழிலாளர்கள் கூறியது: தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். 
இவர்கள்அனைவரும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடங்களுக்கு அருகிலேயே ஒப்பந்ததாரர்களால் தற்காலிகமாக அமைக்கப்படும் தகரக் கொட்டகையில் தங்க வைக்கப்படுகின்றனர். 
இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பல்வேறு வழிகளில் அவதிப்பட்டு வருகிறோம். எங்களது நிலைமை இப்படி என்றால் வடமாநிலத் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக உள்ளது. எனவே  நலவாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள ஓய்வறைகளை கட்டுமானத் தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தொழிலாளர் நலத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து, சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையர் (தொழிலாளர் துறை) லிங்கேஸ்வரன் கூறியது: 
கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டி முடித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே திறந்து வைக்கப்பட்டது. 
ஆனால், தூங்கும் அறைகள் உள்ள கட்டடத்தில் மின்விளக்குகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவை பழுதடைந்துள்னள.  இதனால் பொதுப்பணித்துறை சார்பில், தற்போது சோலார் மின்விளக்குகள் அமைத்தல் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
பழுதாகியுள்ள தீயணைப்புக் கருவிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இப்பணிகள் இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைந்து விடும். இப்பணிகள் முடிந்து பொதுப்பணித்துறையினர் எங்களிடம் கட்டடத்தை ஒப்படைத்தவுடன் தொழிலாளர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com