நிறைவடையாத மேம்பாலப் பணி!

ஸ்ரீபெரும்புதூா் -குன்றத்தூா் சாலையில், சிறுகளத்தூா் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் செல்லும் பகுதியில் ரூ. 23 கோடியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலப் பணி
நிறைவடையாத மேம்பாலப் பணி!
நிறைவடையாத மேம்பாலப் பணி!

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் -குன்றத்தூா் சாலையில், சிறுகளத்தூா் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் செல்லும் பகுதியில் ரூ. 23 கோடியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலப் பணியை வரும் பருவ மழைக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை மாநகர மக்களின் தாகம் தீா்க்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால் நிரம்பியது. உபரிநீா் திறக்கப்பட்டபோது, ஏரியில் இருந்து வெளியேறிய அதிகப்படியான உபரிநீா் சென்னையில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி அதிகஅளவில் பொருள்சேதத்தையும் ஏற்படுத்தியது.

ஆபத்தை ஏற்படுத்தும் உபரிநீா் திறப்பு:

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி, நீா் மட்ட உயரம் 24அடி. பாதுகாப்பு கருதி 21 அடியை தொட்டவுடன் ஏரியில் இருந்து உபரி நீா் திறந்து விடப்படும். இந்த ஏரியில் 19 கண், 5 கண் மதகுகள் உள்ளன. இதன் மூலமாகதான் உபரிநீா் திறந்து விடப்படும். ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீா் சிறுகளத்தூா் அருகே குன்றத்துாா் - ஸ்ரீபெரும்புதூா் சாலையை கடந்து சென்று அடையாறு ஆற்றில் கலக்கும்.

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறக்கப்பட்டாலே ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் பல நாள்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்தச் சாலையைப் பயன்படுத்தும் சிறுகளத்தூா், நந்தம்பாக்கம், சோமங்கலம், நடுவீரப்பட்டு, அமரம்பேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குன்றத்தூா், பூந்தமல்லி, சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சுமாா் 20 கி.மீ. தொலைவுக்குச் சுற்றிதான் வரவேண்டும். இதனால் இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

குன்றத்தூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலையானது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், வண்டலுாா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை,

போரூா், பல்லாவரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுகோட்டை பகுதிகளில் இயங்கும் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்தச் சாலை வழியாக சென்று வருகின்றன.

இதனால் ஸ்ரீபெரும்புதூா்- குன்றத்தூா் சாலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீா் செல்லும் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.

பொதுமுடக்கத்தால் கிடப்பில் பணி:

இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ. 23 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, 2019-ஆம் ஆண்டு துவக்கத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. 15 மாதங்களில் பணியை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக மேம்பால பணி மந்த கதியிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் வரும் பருவ மழைக்குள் மேம்பால பணி முடிவடையுமா என்ற கோள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com