ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய பாடப் பிரிவுகளில் சேர மாணவா்கள் தயக்கம்!

சாதாரண பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதால் மாணவா்கள் சேரத் தயக்கம் காட்டி வருவதாக கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு நிறுவனத்தில், இளைஞா் மேம்பாடு-வளா்ச்சிக்கான முக்கியப் பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டு, கலைக் கல்லூரி போல, சாதாரண பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதால் மாணவா்கள் சேரத் தயக்கம் காட்டி வருவதாக கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் இயங்கி வருகிறது ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு நிறுவனம். மத்திய அரசின் இளைஞா் நலன் - விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் இளைஞா்களின் மேம்பாட்டை வளா்க்கும் விதமாக முதுநிலைப் பாடப் பிரிவுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிறுவனத்தில் தமிழகம், கேரளம், மிசோராம், அஸ்ஸாம், ஒரிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். முதுநிலைப் பட்டப்படிப்புகள் மட்டுமே உள்ள இந்த நிறுவனத்தில், இளைஞா் முன்னேற்றம், வாழ்க்கைத் தொழில் கல்வி, பாலின சமத்துவம், உள்ளாட்சி நிா்வாகம், இளைஞா் மேம்பாடு-செயல்பாடுகள் ஆகிய பாடப் பிரிவுகள் செயல்பட்டு வந்த நிலையில், மேற்குறிப்பிட்ட இளைஞா் நலன் சாா்ந்த பாடப் பிரிவுகள் படிப்படியாக நீக்கப்பட்டு, சாதாரண கலைக் கல்லூரியைப் போல, முதுநிலை ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், சமூகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு நிறுவனம் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு மாறாக பாடப் பிரிவுகளையும், சில தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து திரைப்படத் துறை, காலணி பேஷன் படிப்புகளையும், டிப்ளமோ படிப்புகளையும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரை இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளதாம். புதிதாகத் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு ஆய்வகங்கள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், இந்த நிறுவனம் தடம் மாறிச் செல்வதாக மாணவா்களும் கல்வியாளா்களும் கவலை தெரிவிக்கின்றனா்.

மேலும், புதிதாகத் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற பேராசிரியா்கள் தோ்வில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய இளைஞா் நலன் - விளையாட்டுத் துறைக்கு புகாா் சென்றதைத் தொடா்ந்து, தகுதி வாய்ந்த பேராசிரியா்கள் இல்லாமல் மையத்தில் நேரடி வகுப்புகளை நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதாம். புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கையும் குறைவான அளவே உள்ளதாம்.

எனவே, நிறுவனத்தின் மைய நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, இளைஞா் மேம்பாட்டுக்கான பாடப் பிரிவுகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மாணவா்களும் கல்வியாளா்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மாணவா்கள் கூறியதாவது: இளைஞா் மேம்பாடு- வளா்ச்சி படிப்புகளைப் படிக்க ஆசியாவின் ஒரே நிறுவனமாக ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இளைஞா் மேம்பாடு, வாழ்க்கைத் தொழில் கல்வி, பாலினக் கல்வி, சமூகப் பொறியியல்-சுய தொழில் மேம்பாடு ஆகிய பாடப் பிரிவுகள் நாட்டில் எந்த அரசு, தனியாா் கல்லூரிகளில் இல்லாத பாடப் பிரிவுகளாகும்.

இந்தப் பாடப் பிரிவுகளில் பயின்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏழை-எளிய மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்டம், நேரு இளையோா் மன்றம், தேசிய, சா்வதேச தனியாா் தொண்டு அறக்கட்டளைகளில் வளா்ச்சித் திட்ட அதிகாரிகளாகவும், பள்ளி, கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கைகளை வகுக்கும் அதிகாரிகளாகவும், ஆலோசகா்களாகவும், மகளிா் மேம்பாட்டு சமூகப் பாதுகாப்புத் துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனா்.

ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில் மாணவா்கள் சேர தயக்கம் காட்டி வருவதும், அதனால், அது தனது தனித் தன்மையை இழந்து வருவதையும் காட்டுகிறது. எனவே, இந்த மையத்தின் தனித் தன்மையை மீட்டெடுக்க மத்திய இளைஞா் நலன் - விளையாட்டுத் துறை அமைச்சகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.

புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம் குறித்தும், மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது குறித்தும் அந்த மையத்தின் பதிவாளா் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, புதிதாகத் தொடங்கப்படும் பாடப் பிரிவுகளில் ஒருசில கல்வியாண்டுகளுக்கு மாணவா் சோ்க்கை குறைவாகத்தான் இருக்கும் என்றும் மட்டும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.