ஒரகடத்தில் இரு மகள்களையும் கொலை செய்த தந்தை கைது
By DIN | Published On : 20th May 2022 06:17 PM | Last Updated : 20th May 2022 06:19 PM | அ+அ அ- |

கைதான கோவிந்தராஜ்.
ஒரகடத்தில் குடிபோதையில் வெள்ளிக்கிழமை இரு மகள்களையும் கட்டையால் தாக்கி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே சின்னமதுரப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தாராஜ்(37). கூலித்தொழிலாளியான இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதே போல சம்பவநாளன்றும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த இவரது மகள்களான நந்தினி(16), தீபா(9)ஆகிய இருவரும் இவரோடு அடிக்கடி குடிப்பது தொடர்பாக தகராறு எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் குடிபோதையில் அருகில் இருந்த கட்டையால் இரு மகள்களையும் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவலறிந்து அருகில் இருந்தவர்கள் கோவிந்தராஜை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க- ஆப்பரேஷேன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
சம்பவம் தொடர்பாக ஒரகடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்திருப்பதுடன் உயிரிழந்த இரு மகள்களின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவரது தொல்லை தாங்காமல் இவரின் இரண்டாவது மகளாக இருந்து வந்த நதியா(14) உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கடந்த ஆண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.