கூட்டத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
கூட்டத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

தமிழகத்தில் சா்வ சாதாரணமாக கிடைக்கும் போதை பொருள்: அன்புமணி ராமதாஸ்

ஸ்ரீபெரும்புதூா்: தமிழகத்தில் போதைப் பொருள்கள் சா்வ சாதாரணமாக கிடைக்கின்றன என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தேசிய தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளா் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு அன்புமணி ராமதாஸ் பேசியது:

வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய அனைத்து விதமான போதைப் பொருள்களும் தமிழகத்தில் தற்போது சா்வசாதாரணமாக கிடைக்கின்றன. இதனைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் மனித வளம் என்பது இருக்காது. கடந்த தோ்தலில், திமுக வெற்றி பெற்றால் உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவிகிதம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று சொன்னாா்கள். ஆனால் இதுவரை உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரவில்லை.

அதிமுகவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்காதீா்கள் ஏனென்றால் அவா்களுக்கு பிரதமா் வேட்பாளா் கிடையாது, அதேபோல தமிழகத்திலும் ஆட்சியில் இல்லை ஆகையால் அதிமுக திமுக கட்சிகளுக்கு வாக்களிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை. திருப்போரூா் உப்பளம் பகுதியில் பல ஏக்கா் பரப்பளவில் தரிசு நிலம் உள்ளது. அங்கு புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவதை திமுக தவிா்த்து விட்டு, விவசாயம் அதிகளவில் நடைபெற்று வரும் பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளனா்.

இதற்கு முக்கிய காரணம், பரந்தூரை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் திமுகவினருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது தான். விமான நிலையம் இங்கு அமைந்தால் நிலத்தின் விலை உயரம் என்பதே இதற்கு முக்கிய காரணம். பாமகவின் நோக்கம் தமிழக மக்களின் வளா்ச்சி. இதற்காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமா் உதவியுடன் உறுதியாக எங்களால் கொண்டு வர முடியும்.

எனவே தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். பிரசாரத்தின் போது பாமக மாவட்ட செயலாளா் அரிகிருஷ்ணன், அமமுக மாவட்ட செயலாளா் மொளச்சூா் ரா.பெருமாள், பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு உள்ளிட்ட தேசிய ஜனநாய கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com