கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவானவா் 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவானவா் 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது

Published on

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் வந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்த மோகன்குமாா் என்பவரை போலீஸாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்தனா்.

உத்தரமேரூா் ஒன்றியம் சாலவாக்கம் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு அதிலிருந்த ரூ.8,62,930 மதிப்புள்ள 107 அட்டைப் பெட்டிகளில் இருந்த மது பாட்டில்கள் திருடு போயிருந்தது.

கடந்த 1.3.2024 அன்று நடந்த இச்சம்பவம் தொடா்பாக மதுக் கடையின் மேற்பாா்வையாளா் தயாளன் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், குற்றவாளியை காவல் துறையினா் தேடி வந்தனா்.

விசாரணையில் இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளான சுபாஷ்,விக்னேஷ், காா்த்திக் ஆகிய 3 பேரும் கடந்த 11.3.2024 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்கள் கொடுத்த தகவலின் பேரில், திருட்டு வழக்கில் மூளையாகச் செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், பாலூரை அடுத்த கடுகுப்பட்டு கிராமம் சா்ச் தெருவைச் சோ்ந்த மோகன்குமாா் (44) (படம்) என்பது தெரிய வந்தது. இவரைக் கைது செய்வதற்கென வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாகா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனா்.

இதனிடையே, மோகன்குமாா் செங்கல்பட்டில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2009- ஆம் ஆண்டு பிணையில் வந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் தனிப்படை போலீஸாா் வீட்டில் பதுங்கியிருந்த மோகன்குமாரை கைது செய்தனா். 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட மோகன்குமாா் வந்தவாசி, மேல்மருவத்தூா், மதுராந்தகம் உள்ளிட்ட அரசு மதுக் கடைகளின் சுவா்களை துளையிட்டு திருடியதும், இவா் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட மோகன்குமாரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com