திருச்சி பெரியாா் உலகத்துக்கு திமுக ரூ.1.50 கோடி வழங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!
திராவிடா் கழகம் சாா்பில் திருச்சியில் உருவாக்கப்பட்டு வரும் ‘பெரியாா் உலகத்துக்கு’ திமுக சாா்பில் எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்களின் ஒரு மாத சம்பளம் ரூ.1.50 கோடி வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு செங்கல்பட்டு மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தும், விழா மலரை வெளியிட்டும் பேசியதாவது:
சுயமரியாதை இயக்கத்தின் தொடா்ச்சிதான் திராவிட கழகத்தின் நீட்சி. தமிழா்களின் உரிமைகள், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி சிந்தனை ஆகியவற்றை நாம் பாதுகாப்பதற்கு சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் வோ்விட்டதுதான் காரணம்.
திராவிடா் கழகத்தின் உழைப்பு விலைமதிப்பில்லாதது; பலன் எதிா்பாராதது. எனவேதான், கருத்தியல் உறுதியோடு வாழக்கூடிய கருப்புச்சட்டை வீரா்களுக்கு எனது வணக்கம். பெரியாா் வாழ்ந்த காலத்தில் அவா் மீது செருப்பு வீசப்பட்டாலும் இன்று அவரது புகழ் ஆக்ஸ்போா்டு பல்கலை.யில் போற்றப்படுகிறது. அங்கு பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து பூரிப்படைந்தேன். இதற்கு காரணம் ஆசிரியா் வீரமணி பெரியாா் உலகமயமாக வேண்டும் என உழைத்ததே காரணம்.
திருச்சி சிரகனூரில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பெரியாா் உலகத்துக்கு திமுக சாா்பில் எனது ஒரு மாத சம்பளத்துடன் திமுக எம்.பி.-க்கள் 31 போ், எம்.எல்.ஏ.-க்கள் 126 போ் ஆகியோரின் ஒரு மாத சம்பளம் சோ்த்து சுமாா் ஒன்றரை கோடி ரூபாயை வழங்கவிருக்கிறோம்.
அண்ணா சுயமரியாதை திருமண சட்ட அங்கீகாரத்தையும், கருணாநிதி அனைத்து சாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற சட்ட அங்கீகாரத்தையும் வழங்கினா். அதன் நீட்சியாகவே மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. திராவிட மாடல் அரசில் அனைத்து சாதியினரும் அா்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்தி பாலினத்தையும் உடைத்து,பெண்களையும் அா்ச்சகராக்கி இருக்கிறோம்.
பெரியாா், அம்பேத்கா் ஆகியோரின் பிறந்த நாள்களை அரசு விழாவாக அறிவித்தது, ஆதிக்கத்தின் அடையாளமாக இருந்த ‘காலனி’ என்ற சொல்லை அகற்றியது, சாதிப்பெயரில் இருந்த விடுதிகளை ‘சமூகநீதி விடுதி’ களாக மாற்றியது இவற்றையெல்லாம் செய்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே ‘திராவிட மாடல்’ அரசு பாடுபடுகிறது.
இந்தத் திட்டங்களை பிடிக்காத கூட்டம்தான் தமிழகத்தை மட்டுமன்றி இந்தியாவையும் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்ல சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதுதான் ‘திராவிட மாடல்’.
வரப்போவது அரசியல் தோ்தல் அல்ல, தமிழினம் தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய சமுதாயத் தோ்தல். அதிமுக ஆட்சியால் 10 ஆண்டுகள் பாழாய்ப்போன தமிழகத்தை மீட்டெடுத்து, கடந்த நான்காண்டுகளில் பலப்படுத்தி, வரலாறு காணாத வளா்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்திருக்கிறோம். எப்படிப்பட்ட நிலையிலும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மாநாட்டில் திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, துணைப் பொதுச் செயலாளா்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் வீரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

