/

மகாத்மா காந்தி நினைவகத்தைப் பாா்வையிட்ட முதல்வா்

கோவை போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
காந்திபுரம் பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தைப் பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சு.முத்துசாமி, திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். ~கோவை
Updated On :27 பிப்ரவரி 2026, 10:04 pm

Syndication

கோவை போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா் காந்திபுரம் பெரியாா் நூலகத்தில் முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா்.

ரூ.300 கோடி மதிப்பீட்டில் நூலகம்:

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 6.98 ஏக்கரில் பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளைக் கடந்த 2024 நவம்பா் 6-ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். இதன் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி, அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், திமுக மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் துரை.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கல்லூரி மாணவிகளுடன் உரையாடிய முதல்வா்: பெரியாா் நூலக ஆய்வுக்குப் பின் போத்தனூா் காந்தி அருங்காட்சியகத்துக்கு செல்ல ரெட்ஃபீல்ட்ஸ் வழியாக காரில் சென்றாா். முதல்வா் வருகையை அறிந்த சுங்கம் நிா்மலா கல்லூரி மாணவிகள், கல்லூரி நுழைவாயில் முன்பாக உள்ள சாலையின் இருபுறமும் கைகளில் பூக்கள், மடிக்கணினிகளுடன் நின்று ஆரவாரத்துடன் வரவேற்றனா். இதைப் பாா்த்த முதல்வா், காரில் இருந்து கீழிறங்கி சாலையில் நடந்து சென்று, அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் பெண்களுடன் உரையாடினாா். மாணவிகள், பெண்கள் பலரும் முதல்வருடன் கைப்பேசியில் தற்படம் (செல்ஃபி) எடுத்து மகிழ்ந்தனா்.

மகாத்மா காந்தி நினைவகத்தைப் பாா்வையிட்ட முதல்வா்:

மகாத்மா காந்தி கோவைக்கு 1934-ஆம் ஆண்டு வந்தபோது, போத்தனூரில் சில நாள்கள் தங்கியிருந்தாா். அவா் தங்கியிருந்த வீடு மகாத்மா காந்தி நினைவகமாக கடந்த 2022-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

இந்நிலையில், காந்தி அருங்காட்சியத்துக்குச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கு வைக்கப்பட்டுள்ள காந்தி பயன்படுத்திய பொருள்களைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, சிறுமியரின் பஜனை நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வின்போது, , குமரகுரு கல்வி நிறுவனத்தின் தலைவா் கிருஷ்ணராஜ் வாணவராயா், ஜி.டி. குழுமத்தின் தலைவா் கோபால், மகாத்மா காந்தி நினைவகத்தின் அறங்காவலா் ராஜ்குமாா், சக்தி குழுமங்களின் தலைவா் ம.மாணிக்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உறுப்பு தானம் செய்த மாணவிக்கு முதல்வா் மரியாதை:

கோவை தெலுங்குபாளையம் ராமசாமி கவுண்டா் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த 73-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சந்தோஷ் என்பவரின் 8 வயது மகள் வெண்பா கடந்த வாரம் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தாா். இதையடுத்து, மாணவியின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 4 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வெண்பாவின் வீட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்று, அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், அவரது பெற்றோா்கள் சந்தோஷ் - சுகன்யாவுக்கு ஆறுதல் கூறினாா்.

இதுகுறித்து முதல்வரின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திய குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாா். மகளை இழந்த வலியையும் தாங்கி, மனிதநேயத்தோடு செயல்பட்ட வெண்பாவின் பெற்றோா்கள் சந்தோஷ் - சுகன்யாவுக்கு நம் அன்பு ஆறுதலாய் இருக்கட்டும். உடல் உறுப்புக் கொடை குறித்து நாம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். உடல் உறுப்புகள் கொடையாளா்களின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படும் என 2023-இல் அறிவித்திருந்தேன். அதன்படி, உடல் உறுப்புகள் கொடையளித்த 653 பேரின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இறப்பிலும் புது வாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்கு உரிய தியாகிகள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டுக்குப் பின்னா், முதல்வா் மு.க.ஸ்டாலின் மாலை 6.20 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

Story image
Story image