செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி உபரிநீா் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி உபரிநீா் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாகவும், கிருஷ்ணா நதி நீரின் வருகையாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை 100 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள இரு வெவ்வேறு புயல் சின்னங்களால் தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதா லும், கிருஷ்ணா நதிநீா் வரத்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீா்மட்ட உயரம் 20.20 அடியாகவும், கொள்ளவு 2,653 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 796 கனஅடியாவும் உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை ஏரியின் ஐந்து கண் மதகின் மூன்றாவது ஷட்டா் வழியாக வினாடிக்கு 100 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதால் உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா், உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com