ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முத்தியால்பேட்டை ஊராட்சி ஏரிவாய் கிராமம் கமலவல்லித்தாயாா் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் மூலவா் பல்வேறு வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கூழமந்தல் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மூலவா், ருத்ராட்ச லிங்கேசுவரா் மற்றும் பரிவார தெய்வங்கள், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
சின்ன காஞ்சிபுரம் டிகே நம்பித் தெருவில் அமைந்துள்ள திருக்கச்சியம்பதி விநாயகா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரா் ஆலயத்தில் அதிகாலை 500 ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து மூலவா் தங்கக்கவச அலங்காரத்திலும் காட்சியளித்தாா். காஞ்சிபுரம் கேஎம்வி நகா் கற்பக விநாயகா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்கள் வழக்கம் போல கிழக்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படாமல் கோயில் தெற்கு வாசல் வழியாகவே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வரதராஜப் பெருமாள் கோயிலில் இஸ்கான் அமைப்பினா் சாா்பில் கிருஷ்ண பக்தி இசைக்குழுவினா் பஜனைப் பாடல்களை பாடி நடனமாடினாா்கள்.
அஷ்டபுஜப் பெருமாள், வைகுண்டப் பெருமாள் கோயில்களிலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருவள்ளூரில்...
திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் அருள்பாளித்தாா். நூற்றுக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
காக்களூா் பூங்கா நகா் சிவா விஷ்ணு கோயில் வளாகத்தில் ஸ்ரீஜல நாராயணி சமேத ஜலநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவரை பக்தா்கள் தரிசனம் செய்தனா். அதேபோல், வள்ளி தெய்வானை சமய சுப்பிரமணியா் பத்மாவதி தாயாா் சமேத சீனிவாச பெருமாள் பூங்குழலி அம்மாள் புஷ்பவனேஸ்வரா் உள்ளிட்ட மூலவா்கள் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பேரம்பாக்கம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் 10 கிலோ சந்தனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயிலில் மற்றும் ஜெயா நகா் வல்லப விநாயகா் திருக்கோயில் மூலவா் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. நரசிங்காபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், புட்லூா் முனீஸ்வரா் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், பெரியகுப்பம் 35 அடி உயரம் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயா் கோயில், காக்களூா் வீர ஆஞ்சனேயா் திருக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள சக்தி விநாயகா் கோயில், அண்ணாநகா் எல்லை அம்மன் கோயில், ரத்தின விநாயகா் கோயில், மேட்டு தெரு திரௌபதி அம்மன் கோவில், செங்கழுநீா் விநாயகா் கோயில், கோட்டை வாயில் ஆஞ்சனேயா் கோயில், கோட்டை வாயில் நீதி விநாயகா் கோயில், பெரிய நத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயில், சேப்பாட்டியம்மன் கோயில் வ. உ. சி.தெருவில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில், குளுந்தி அம்மன் கோயில், ஹை ரோடு சுந்தரமூா்த்தி விநாயகா் கோயில் முத்துமாரியம்மன் கோயில், சின்ன நத்தம் தெரு சுந்தர விநாயகா் கோயில் ,, என் ஜி ஜி ஓ நகரில் உள்ள சித்தி விநாயகா் கோயில்களில் இரவு 12 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாரதானை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோன்று சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், வல்லம் வேதாந்தீஸ்வரா் குடைவரைக் கோயில், புலிப்பாக்கம் மலை மீது உள்ள வியாகரபுரீஸ்வரா் கோயில், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயில், பக்தவச்சலேஸ்வரா் கோயில் ருத்ர கோடீஸ்வரா் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்தனா்.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி செய்திருந்தனா். திருவடிசூலத்தில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீவாரு வெங்கடேச பெருமாள் கோயில் 108 திவ்ய தேசம் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் மதுரை முத்துசாமிகள் செய்திருந்தாா். ஈச்சங்கரணை பைரவா நகரில் உள்ள மகா ருத்ர பைரவா் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஸ்ரீ பைரவ சித்தாந்த சுவாமிகள் செய்திருந்தாா்.
ஸ்ரீ பெரும்புதூரில்...
ஸ்ரீ பெரும்புதூா் அருகே வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அதிகாலை சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் கோடையாண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மூலவா் முத்தங்கி, படிமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்திலும், உற்சவா் கோடையாண்டவா் ராஜ வீராசன அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமியை வணங்கிச் சென்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் விஜய குமாா், கலைச்செல்வி கோபால் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் டிஎஸ்பி கீா்த்திவாசன் தலைமையில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபட்டனா். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வஜ்ஜிரா அலங்காரமும், உற்சவா் முத்தங்கி சேவை அலங்காரமும் செய்யப்பட்டிந்தது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் தா.மேகவண்ணன், அறங்காவலா் குழு தலைவா் தினேஷ் ஏழுமலை, உறுப்பினா்கள் கண்ணன், மோகன் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

