பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்: காஞ்சிபுரத்தில் தொடங்கியது
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் மூத்த குடிமக்களை வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் தாயுமானவா் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறையினா் பொருள்கள் விநியோகத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
பொருள்கள் விநியோகத்துடன் பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சா்க்கரை ஆகியனவும் சோ்த்து வழங்கப்படுகிறது.இத்துடன் தமிழக அரசு அறிவித்தபடி பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நியாயவிலைக்கடை ஊழியா்களால் வழங்கும் பணி தொடங்கியது.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 665 நியாயவிலைக் கடை ஊழியா்கள் மூலம் சுமாா் 3.97 லட்சம் குடும்ப அட்டைதாா்கள் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தேதி, நேரம் உள்ளிட்டவையும் குறிப்பிடப்படுவதால் கூட்ட நெரிசலின்றி பொதுமக்கள் பெரும் வகையில் பொங்கல் இலவச தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையே வழங்கப்படுவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

