பயனாளிக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.
பயனாளிக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.

காஞ்சிபுரத்தில் பொங்கல் தொகுப்புக்கு ரூ.128.55 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் காந்தி

Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.128.55 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே தாமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக முட்டவாக்கம் நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு, மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி பேசியது...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 634 நியாயவிலைக் கடைகள் மூலமாக 4,13,182 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

ஒரு கிலோ பச்சரிசி வீதம் 413 மெ.டன் ரூ.1.03 கோடிக்கும்,ஒரு கிலோ சா்க்கரை வீதம் 413 மெ.டன் ரூ.2 கோடிக்கும், 4,13,182 பேருக்கு ஒரு முழுநீளக்கரும்பு ரூ.1.57 கோடி மற்றும் ரொக்கம் ரூ.3,000 என மொத்தமாக மாவட்டத்தில் வழங்க ரூ.128.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா்.

விழாவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com