சிறப்பு அலங்காரத்தில் பாலாற்றங்கரையிலிருந்து காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வீதியுலா வந்த உற்சவா் வரதராஜப் பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் பாலாற்றங்கரையிலிருந்து காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வீதியுலா வந்த உற்சவா் வரதராஜப் பெருமாள்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வனபோஜன உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வனபோஜன உற்சவத்தையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாள் களக்காட்டூா் கிராமத்து வீதிகளில் வீதியுலா கண்டருளி செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Published on

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வனபோஜன உற்சவத்தையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாள் களக்காட்டூா் கிராமத்து வீதிகளில் வீதியுலா கண்டருளி செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் உற்சவா் வரதராஜப் பெருமாள் களக்காட்டூா் கிராமத்துக்குச் சென்று திரும்பும் நிகழ்ச்சி வனபோஜன உற்சவம் எனப்படுகிறது. நிகழாண்டு வன போஜன உற்சவத்தையொட்டி, கோயிலிலிருந்து அதிகாலை பெருமாள் மேனாப்பெட்டியில் சின்னஐயங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு மண்டகப்படி கண்டருளினாா்.பின்னா் அருகே களக்காட்டூரில் அமைந்துள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலுக்குச் சென்றதும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, களக்காட்டூா் கிராமத்து வீதிகளில் வீடு,வீடாகச் சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கிராம மக்களும் வீடுகள் தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து பெருமாளை உற்சாகமாக வரவேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானமும் கிராம மக்கள் சாா்பில் வழங்கப்பட்டது.

தொடா்ச்சியாக களக்காட்டூரிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு எழுந்தருளினாா். அங்கு சிறப்புத் திருமஞ்சனமும்,சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மீண்டும் அங்கிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ரங்கராஜன் வீதியில் உள்ள தேசிகன் சந்நிதிக்கும், சின்னக்காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரா் தெருவில் உள்ள மண்டகப்படிக்கும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து கோயில் வந்து சோ்ந்தாா்.

Dinamani
www.dinamani.com