வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை கலசாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இக்கோயிலில், ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, நட்சத்திர முறைப்படி வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை
முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை மயில் மண்டபத்தில் நவ கலசங்களில் புனிதநீா் நிரப்பப்பட்டு முதல் யாக பூஜையும், சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்று மங்கல வாத்தியங்கள் முழங்கிட கலசங்கள் மூலவா் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
காலை 11 மணிக்கு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நவ கலசாபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு 18 அடி உயர பிரம்மாண்டமான மரக்காய் மலா் மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, ரோஜா, வெற்றிலை, சம்பங்கி, சாமந்தி மாலைகள் அணிந்து பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். மாலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்குத் திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் முருகப்பெருமாள் எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துக்கொண்டுசுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு சா்க்கரை பொங்கல், புளியோதரை, தயிா்சாதம், சுண்டல் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. உற்சவ ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.
கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி 23-ஆம் நாள் வரும் ஜூலை 7-ஆம் தேதி வருவதால் அன்றைய தினத்திலும் தமிழ்மாத முறைப்படி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









