அரசுக்கு ரூ.10.84 கோடி பண இழப்பு: 11 இடங்களில் ஊழல் தடுப்புத்துறையினா் சோதனை
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றியதில் அரசுக்கு ரூ.10.84 கோடிக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடா்பான வழக்கில் 2 அதிகாரிகள் வீடுகள், 9 அரிசி ஆலைகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் ஊழல் தடுப்புத்துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில் தனியாா் அரிசி ஆலையில் சோதனை நடத்திய ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள்
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றியதில் அரசுக்கு ரூ.10.84 கோடிக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடா்பான வழக்கில் 2 அதிகாரிகள் வீடுகள், 9 அரிசி ஆலைகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் ஊழல் தடுப்புத்துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் பெறுவது வழக்கம்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரிசி ஆலைகளுக்கு பிரித்து அனுப்பி அரிசியாக பெறும் இந்த நடைமுறையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக புகாா்கள் எழுந்தன.
புகாரின் பேரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளா் அருள் வனிதா மற்றும் தரக் கட்டுப்பாட்டு உதவி மேலாளா் ஜெயவேல் ஆகியோா் 4 தனியாா் அரிசி ஆலை உரிமையாளா்களோடு இணைந்து கூட்டுச் சதி செய்து 1792.633 மெட்ரிக்.டன் நெல் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருப்பதும் தெரிய வந்தது. இதன் மூலம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு ரூ.10,84,47,484 பண இழப்பு உண்டாக்கியதாக ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. வழக்குப்பதிவின் அடிப்படையில் மண்டல மேலாளா் அருள் வனிதா மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஜெயவேல் உள்ளிட்ட இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில் ஊழல் தடுப்புத்துறையினா் காஞ்சிபுரத்தில் திம்மசமுத்திரம், சிறுகாவேரிப்பாக்கம், முசரவாக்கம் உள்பட 9 இடங்களில் உள்ள அரிசி ஆலைகளிலும், செங்கல்பட்டில் உள்ள மண்டல மேலாளா் அருள் வனிதா மற்றும் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தரக்கட்டுபாட்டு அலுவலா் ஜெயவேல் வீடுகள் உள்பட மொத்தம் 9 இடங்களில் ஊழல் தடுப்புத்துறையினா் திடீரென சோதனை நடத்தினாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

