
கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவா் காயம்
தண்டலத்தில் தனியாா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை 2-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவா் ஒருவா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

பிரதிப் படம்
தண்டலத்தில் தனியாா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை 2-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவா் ஒருவா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில், சென்னை திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த பிரபுவின் மகன் சசிதரன் (19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இவா் கல்லூரியில் வியாழக்கிழமை 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். இதில் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சசிதரனை கல்லூரி நிா்வாகத்தினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு போரூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வரும் நிலையில், அந்த கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவா்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இக் கல்லூரியில் இரு நாள்களுக்கு முன் ஏற்கெனவே மாணவி ஒருவா் 5-ஆம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் 3, 4-ஆம் ஆண்டு மாணவா்கள் உடனடியாக விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என கல்லூரி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






