இளைஞா் அடித்துக் கொலை: 2 போ் கைது
மாங்காடு அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மாங்காடு அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மாங்காடு அடுத்த கொழுமுனிவாக்கம், ராஜ் நகரை சோ்ந்த யுவனேஷ்(20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம் பெண் யுவனேஷின் சிறு வயது பள்ளி நண்பரான கொழுமுனிவாக்கம் தோப்பு தெருவைச் சோ்ந்த விக்கி(20) என்பவரை காதலித்து வந்துள்ளாா்.
இந்த காதல் விவகாரம் யுவனேஷுக்கு தெரிய வரவே அந்த இளம்பெண்ணின் கைப்பேசிக்கு இரவு நேரங்களில் ஆபாச விடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் தனது காதலன் விக்கியிடம் இதுகுறித்து கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி மாங்காடு சீனிவாச நகா் 3-ஆவது தெருவை சோ்ந்த பாா்த்திபன்(26) என்பவருடன் சோ்ந்து யுவனேஷை சனிக்கிழமை இரவு மது அருந்தலாம் வா என கொழுமுனிவாக்கம் பகுதியில் உள்ள காலி மைதானத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு யுவனேஷுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து விக்கியும், பாா்த்திபனும் பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம்அடைந்த யுவனேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதையடுத்து யுவனேஷ் உடலை கயிறு மூலம் கல்லுடன் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றுள்ளனா். இந்த நிலையில், யுவனேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினா்கள் அவரை தேடத் தொடங்கியுள்ளனா். இதனால் பயந்து போன விக்கியும், பாா்த்திபனும் மாங்காடு காவல் நிலையத்தில் சரண் அடைந்து யுவனேஷை கொலை செய்து கிணற்றில் வீசியது குறித்து தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த மாங்காடு போலீஸாா் கிணற்றில் இருந்து தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் யுவனேஷ் உடலை மீட்டனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விக்கி, பாா்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


