சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு
சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில், ஓணம் பண்டிகையையொட்டி, ஐயப்ப பக்தா்கள் இருமுடி கட்டி, நெய் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.


ராணிப்பேட்டை,: சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில், ஓணம் பண்டிகையையொட்டி, ஐயப்ப பக்தா்கள் இருமுடி கட்டி, நெய் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.
கேரள மக்களால் ஜாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளத்தின் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பா். ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் அந்த மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ‘அத்தப்பூ’ என்ற பூக்கோலம் போடப்படுவது வழக்கம்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களரி, படகுப் போட்டிகள், யானைத் திருவிழா, பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாள்களும் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும், அறுசுவை உணவுகளை பரிமாறியும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவாா்கள்.
ஓணம் பண்டிகையையொட்டி புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபடுவா்.
இதேபோல், ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு அஷ்டாபிஷேக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா், ஐயப்பன், ஆஞ்சநேயா், நாகராஜா உள்ளிட்ட சுவாமிகளுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து ஐயப்ப பக்தா்கள் இருமுடி கட்டி நெய்யபிஷேகம் செய்தனா். அதன் பின், ஐயப்பனுக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிப்காட் பகுதியில் வசிக்கும் கேரள மாநிலப் பெண்களும், தமிழகப் பெண்களும் இணைந்து கோயில் வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு வழிபட்டனா். மாலையில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, சிறப்பு பஜனை ஆகியவை நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...