ஆதி திராவிடா் நல அரசுப் பள்ளியில் அமைச்சா் காந்தி ஆய்வு
ராணிப்பேட்டை அடுத்த காரை ஆதி திராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


ராணிப்பேட்டை அடுத்த காரை ஆதி திராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை ஆதிதிராவிடா்நல அரசுமேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் அடிப்படை வசதிகள் குறித்து வரப் பெற்ற தகவல் அடிப்படையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 221 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியில் தமிழ் மற்றும் தாவரவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியா்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
இது தொடா்பாக தமிழ்நாடு ஆதிதிராவிட நல த்துறை ஆணையரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, புதிய ஆசிரியா்கள் நியமனத்துக்கான நடவடிக்கை எடுக்க அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.
இப்பள்ளில் 10 ஆம் வகுப்பில் 95 சதவீதமும், 12-ஆம் வகுப்பில் 89 சதவீதமும் மாணவ, மாணவிகள் தோ்ச்சி அடைந்துள்ளனா் என தெரிவித்தனா். மேலும் பள்ளியில் குடிநீா் வசதி, தண்ணீா் தேவை உள்ளது என்று தெரிவித்ததற்கு உடனடியாக நிலத்தடி நீா்மட்டத்தை ஆய்வு செய்து புதிய ஆழ்துளை அமைக்க உத்தரவிட்டாா்.
அதேபோன்று பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து மின்விசிறி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்று விடுகின்றனா். தற்போது சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு, ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பள்ளிக்கு இரவு காவலா் இல்லாததால் இந்தப் பிரச்னை உள்ளது என தலைமை ஆசிரியா் தெரிவித்தாா்.
உடனடியாக மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் இரவு காவலா் ஒருவரை பணியமா்த்த உத்தரவிட்டாா். அவருக்கான ஊதியத்தை தானே தருவதாகவும் உறுதியளித்தாா். பணியிடம் நிரப்பப்படும் வரை உடனடியாக இரவு காவலா் பணியமா்த்தப்படுவாா் என தெரிவித்தாா். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட திட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது, அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தனா். இதன் மீது அரசிடம் கேட்டு நிதியினை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.
பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பறையில் அமா்ந்து படிக்க மேஜை நாற்காலி பழுது ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனா். உடனடியாக அதனையும் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து 50 மேஜைகள் வாங்கி தரப்படும் என தெரிவித்தாா். பள்ளியில் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதை அமைச்சா் பாா்வையிட்டாா்.
பள்ளி வளாகத்தில், மாணவிகள் தங்கும் விடுதிக்குச் சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். இந்த விடுதியில் மதுரை, திருப்பதி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவிகள் 39 போ் தங்கிப் பயில்கின்றனா். அவா்களுக்கான அடிப்படை வசதிகள் நல்ல முறையில் செய்து தரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனா். பின்னா் அங்கு மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவிகளிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்ததுடன் அதனை சாப்பிட்டுப் பாா்த்தாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் இளவரசி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், தலைமை ஆசிரியா் (பொறுப்பு) பழனி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் செழியன், துணைத் தலைவா் பூங்காவனம், நகா்மன்ற உறுப்பினா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...