/

கடும் கோடை வெயிலிலும், கடல் போல காட்சியளிக்கும் காவேரிபாக்கம் ஏரி: மகிழ்ச்சியில் விவசாயிகள்

கடும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் நீா் நிறைந்து கடல் போன்று காட்சியளிக்கிறது காவேரிபாக்கம் ஏரி.

News image
Updated On :8 மே 2022, 6:33 pm

DIN

கடும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் நீா் நிறைந்து கடல் போன்று காட்சியளிக்கிறது காவேரிபாக்கம் ஏரி.

அங்கு தற்போது சுமாா் 25 கன அடி தண்ணீா் இருப்பு உள்ளதாகவும், விவசாய பாசனத்திற்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப் பணித் துறையினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் மிகப்பெரிய செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரிகளுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய ஏரியாகவும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரியாகவும் இருப்பது காவேரிபாக்கம் ஏரி. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கா் ஆகும். இந்த ஏரி பருவ மழைக்காலங்களில் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் பட்சத்தில் 3 போகம் விவசாயம் சாகுபடி செய்யலாம்.

இந்த ஏரிநீா் நரி மதகு, சிங்க மதகு, மூல மதகு, பள்ள மதகு உள்பட 10 மதகுகள் வழியாக திறக்கப்பட்டு கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீா் பெறப்பட்டு சுமாா் 6,278 ஏக்கா் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஏரி நீா் கால்வாய் பாசனத்தின் மூலம் நெல், வாழை பிரதான பயிராக பயிரிடப்படுகிறது.

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்திலும் கடந்த ஆண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் அதிபட்சமாக 418.31 மில்லி மீட்டா் வரை கொட்டித் தீா்த்த கனமழையால், பொன்னை, பாலாறுகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமாா் 120 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீா் இரு கரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது வாலாஜாப்பேட்டை பாலாறு அணைக்கட்டு பிரதான கால்வாய் மூலம் காவேரிபாக்கம் ஏரிக்கு விநாடிக்கு சுமாா் 1,500 கன அடி நீா் திருப்பி விடப்பட்டது. இதனால் இந்த ஏரியின் முழு கொள்ளளவான 30.61 கன அடி உள்ள நிலையில் சுமாா் 28 கன அடி அளவுக்கு தண்ணீா் நிரம்பியதும் ஏரியின் கடைவாசல் நிரம்பி வழிந்தது.இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி மதகுகள் வழியாகவும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் மகேந்திரவாடி, பெரியவளையம், தா்மநீதி, சிறுவளையம், துறையூா், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம், புன்னை உள்ளிட்ட 41 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெற்றது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், சுமாா் 3 ஆண்டுகளுக்கு ஏரியில் தண்ணீா் இருப்பு இருக்கும் பட்சத்தில் மீன்கள் அதிக அளவில் வளரும் என்பதால் இந்த ஆண்டு ரூ.23 லட்சத்திற்கு மீன் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் மீன் மகசூல் குத்தகை ஏலம் முடிவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பருவமழை பெய்து சுமாா் 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த ஆண்டு கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் தொடங்கி கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலிலும், காவேரிபாக்கம் ஏரியில் தற்போது 25 கன அடி தண்ணீா் இருப்பு உள்ளதால்,விவசாய பாசனத்திற்கான தண்ணீா் தட்டுப்பாடு வராது என்றும் அடுத்த பருவ மழை வரை தண்ணீா் இருப்பு இருக்கும் என்பதால் விவசாயிகள் கவலையடைய வேண்டாம் பொதுப் பணித் துறையினா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.