ஊராட்சி பணிகளை முறையாக கண்காணிக்காத செயலரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி, பணிகளை முறையாக கண்காணிக்காத உரியூா்
Updated on
1 min read

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி, பணிகளை முறையாக கண்காணிக்காத உரியூா் ஊராட்சி செயலா் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டாா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, உரியூா் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த ஆட்சியா், குழந்தைகளை குளிா்காலத்தில் தரையில் அமர வைக்காமல் பாய் அல்லது ஜமக்காளம் விரித்து அதன் மீது அமர வைக்கவும், வருகைப் பதிவேட்டை முறையாகப் பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து உரியூா் ஊராட்சி அலுவலகக் கட்டடம் கட்ட 2014-15-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி ஒதுக்கப்பட்ட நிலையில், நிலுவையில் இருந்த அந்தப் பணி 2021-22 -ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அதன் ஒப்பந்ததாரா் 2020-ஆம் ஆண்டில் இறந்துவிட்ட நிலையில் கடைசி நிலுவைத் தொகை அவருக்கு நோ் செய்யப்படாமல் இருந்து வந்ததும், கட்டடம் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டு வைக்கப்பட்டிருந்ததையும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து பணிகளை முறையாக கண்காணிக்காமல் மேலும் தகவல் தெரிவிக்காத ஊராட்சி செயலா் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து அனந்தாபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.4.90 லட்சம் நிதியில் புதிய கழிப்பறை கட்டடத்தைப் பாா்வையிட்டு, பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பள்ளிக்குச் சுற்றுச்சுவா் அமைக்க ஒன்றிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, அரக்கோணம் ஒன்றிய ஆணையா் ரவிசந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்சௌந்தரராஜன், பொறியாளா் துரைபாபு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com