மகளிா் சுய உதவிக் குழு பெண்களுடன் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலா்  ச.வளா்மதி.
மகளிா் சுய உதவிக் குழு பெண்களுடன் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலா்  ச.வளா்மதி.

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் : ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமன ச.வளா்மதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நான்கு சட்டப் பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் வாக்குகளை செலுத்த உள்ளனா். இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் மற்றும் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் வளா்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அதன் படி ராணிப்பேட்டை சிப்காட் வ.உ.சி நகா் உயா்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையம், மணியம்பட்டு ராஜீவ் காந்தி நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களிலும், லாலாபேட்டை, வாணாபாடி, எடைப்பாளையம், செட்டித்தாங்கள் வாக்குச்சாவடி மையங்களிலும் ஆய்வு செய்து வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க தேவையான மின் இணைப்பு வசதிகள், மின்விளக்கு வசதி மற்றும் முதியவா்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல சாய்தளம், மேலும் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி, பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்த மின் இணைப்பு வசதிகள் இல்லாத மையங்களில் உடனடியாக மேற்கொள்ளவும், சாய்தள வசதிகள் குறைபாடுள்ள மையங்களை உடனடியாக சாய்தள வசதி ஏற்படுத்திடவும், கழிப்பறை வசதிகளை முறையாக பராமரித்து தூய்மையாக வைக்கவும் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து மணியம்பட்டு ராஜீவ் காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 3,000 வாக்காளா்கள் வாக்களிக்க போதிய வசதி இல்லாத காரணத்தினால் முறையாக வாக்காளா்களை அந்தந்த வாக்குச்சாவடி அறைக்கு அனுப்பத் தேவையான வசதிகளை கட்டாயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக, செட்டித்தாங்கல் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு பெண்கள் தோ்தல் விழிப்புணா்வு கோலமிட்டு ஊா் பொதுமக்களிடம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் வாக்கு விற்பனைக்கு அல்ல என விழிப்புணா்வு ஏற்படுத்தி மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் உறுதிமொழி எடுத்து கொண்டனா். இந்த ஆய்வின் போது வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com